மற்றவை

எம்.இ. கணினி அறிவியல் படிப்பில் எம்சிஏ பட்டதாரிகள் இனி சேர முடியாது

ஜெ.கு.லிஸ்பன் குமார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக். உள்ளிட்ட படிப்பு களுக்கு ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க நேற்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். சென்னை ஒருங்கிணைப்பு மையத்தில் மட்டும் நேரடியாக 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையே, எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை எம்சிஏ பட்டதாரிகள் எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இனி எம்சிஏ பட்டதாரிகள் எம்.இ. கணினி அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங், சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் ஆகிய பாடங்களில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே எம்இ கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இயலும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனியார் சுயநிதி கல்லூரிகள் பிஇ, பிடெக் படிப்பைப் போன்று அரசு ஒதுக்கீட்டுக்கு குறிப்பிட்ட இடங்களை வழங்கத் தேவை யில்லை. அவை விருப்பப்பட்டு கொடுக்கும் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதேநேரத் தில், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளில் தனியார் சுயநிதி கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குகின்றன. சிறுபான்மையினர் கல்லூரிகளாக இருப்பின் 30 சதவீத இடங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இந்த முறையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

SCROLL FOR NEXT