மற்றவை

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் தலைமுடியை வெட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி: 2 ஆசிரியைகள் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை தனியார் பள்ளியில், தலைமுடியை வெட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, வேலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி யில் கடந்த 5-ம் தேதி, பொறுப்பாசிரியை சுமதி 9-ம் வகுப்பில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆங்கில ஆசிரியை தேவி உடன் இருந்துள்ளார்.

அப்போது, வகுப் பறையில் இருந்த மாணவி ஒருவர், தனது தலைமுடியின் முன் பக்கத்தில் கிளிப் குத்தியுள்ளார். அதைக் கண்டித்த சுமதி, கிளிப்பை கழட்டியதோடு, முன் பக்க தலைமுடியை கத்திரிக்கோல் மூலம் வெட்டியதாகவும். அதற்கு ஆசிரியர் தேவி துணைபோனதாக வும் கூறப்படுகிறது.

வீட்டுக்கு சென்றதும் இதுபற்றி அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், மகளை சமாதானப்படுத்தியுள்ளார். மறுநாள் (6-ம் தேதி) காலை மாணவி, மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விவரத்தை கேட்டபோது, மாணவர்கள் மத்தியில் தனது தலைமுடியை வெட்டியதால் மன வேதனையில் எலி மருந்து சாப்பிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன், மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளார். இதற்கிடையில், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று பொறுப்பாசிரியை சுமதி மீது திருவண்ணாமலை கிராமிய போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி நீக்கம்

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “மாணவியின் தலைமுடியை ஆசிரியை வெட்டியது உண்மைதான். இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. முடியை வெட்டிய ஆசிரியைகள் சுமதி, தேவி ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளோம்” என்றனர்.

ஒரு வாரத்தில் 3வது நிகழ்வு

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் பொ.பொன்னையா கூறும்போது, “தனியார் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி குறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை நடத்தியுள்ளார். அவர், தனது அறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கவனத்துக்கு கொண்டு சென் றுள்ளோம். ஒரு வாரத்தில் 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவ்வாறு நடைபெறுவது வருத்தமளிக் கிறது. தற்கொலை முடிவுகளில் இருந்து மாணவ மாணவிகளை பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT