இஸ்ரேல் நாட்டின் மதுபான பாட்டில்களில் மகாத்மா காந்தி புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதற்கு மாநிலங்களவையில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இஸ்ரேல் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான மதுபான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ விஸ்கி' மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலாக பரவின. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும், குறிப்பிட்ட மதுபான பாட்டில்களில் இருந்து காந்தியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது, மகாத்மாவை அவமதிக்கும் செயல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க நிறுவனம்
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இயங்கி வரும் மதுபான நிறுவனம் தயாரித்த பீர் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு வந்தது. இதற்கு இந்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காந்தியின் படத்தை மது பாட்டிலில் இருந்து அந்நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.