கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவுகள் தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன''என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றி கனவு காண வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவருக்கு இன்று இரண்டாவது நினைவு நாள்.
எளிய வாழ்க்கையிலிருந்து…
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாய் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் பிறந்த அவரின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக்குட்டியான கலாம், குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய் சென்று செய்தித்தாள் விநியோகித்ததை தன் வாழ் நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
1958-ம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். அப்போது கலாமின் சம்பளம் ரூ. 250 தான். தனது சிந்தனையாலும், உழைப்பாலும் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைகோள் திட்டத்தில் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து திரிசூல், அக்னி, பிரித்வி ஏவுகணை திட்டங்களுக்கும் இயக்குநராகப் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி மதியம் 3.45 மணியளவில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தினார். பணி ஓய்வு பெற்ற பின்னர் இந்தியாவின் அறிவியல் ஆலோசகராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பிடித்த கண்டுபிடிப்புகள்
பின்னர் 2002 ஜூலையில் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து தனது பேச்சாற்றால் மூலமாக கோடிக்கணக்கான பள்ளி -கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடினார். அதுவரையிலும் சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடிப் பிடித்த மாணவ, இளைஞர்
பட்டாளங்கள் கலாமின் உரைகளால் ஈர்க்கப் பட்டு அவரை தங்களின் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டனர். அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை தயாரித்ததைவிட மாற்றுத் திறனாளிகளுக்காக எடை குறைந்த செயற்கைக் கால்கள், இதய நோயாளிகளுக் கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுப்பிடிக்க உதவியதைத்தான், கலாம் தனக்குப் பிடித்தமான கண்டுப்பிடிப்புகள் என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இளம் வயது ஆர்வம்
இது குறித்து திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாமுடன் உடன் படித்தவரும், கலாமின் 60 ஆண்டு கால நண் பருமான கிருஷ்ணமாச்சாரி கூறியதாவது:
திருச்சியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்தபோது கல்லூரி விடுதியில் தங்கி கலாம் பயின்றார். நான் ஜீயபுரத்திலிருந்தும், எழுத்தாளர் சுஜாதா ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சிக்கு தினந்தோறும் வருவோம்.மாணவப் பருவத்தில் மற்ற நண்பர்களைப் போல அரட்டை அடிப்பவராக இல்லாமல் அமைதியாகவும், மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவராகவும் கலாம் இருந்தார்.
கல்லூரி நாட்களில் ‘வானூர்தி கட்டுவோம்’ என்ற கட்டுரையை தமிழில் எழுதி முதல் பரிசைப் பெற்றார். கல்லூரி நாட்களில் அவர் பகிர்ந்துகொண்ட தொலைநோக்குச் சிந்த னைகளுக்கு எல்லாம், தன் பணி நாட்களில் செயல் வடிவம் கொடுத்தார்.
கல்லூரி நாட்களுக்கு பின்னர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாயின் தலைமையின் கீழ் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தோம். நான் எழுதும் கடிதங்களுக்கு, எத்தனையோ பணிகளுக்கு மத்தியிலும் கலாம் தன் கைப்படவே பதில் எழுதுவார். அவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன்.
அரசு நடவடிக்கை தேவை
அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட்கள் என எத்தனையோ கண்டுப் பிடிப்புகளை கலாம் நிகழ்த்தியிருக்கிறார். ராணுவம், வானூர்தி, விண்வெளி என எண்ணற்றத் துறைகளிலும் பணியாற்றி இருக் கிறார். ஆனால் அவற்றை எல்லாம்விட நான்கு கிலோ எடை கொண்ட இரும்புச் செயற்கைக் கால்களை குழந்தைகள் அணிந்து கஷ்டப் படுவதைப் பார்த்து கலாம் கவலையில் ஆழ்ந்தார்.
அவர்களுக்காக 400 கிராமில் எடை குறைந்த செயற்கைக் கால்களைத் தயாரித்தார். இதய நோயாளிகளுக்கு பயன்படக் கூடிய ஸ்டெண்ட் எனும் கருவி லட்சக்கணக்கான ரூபாய் விலையில் இருந்தது. ஆனால், இதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்க உதவினார். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் கலாமுக்குப் பிடித்தமானவை. இந்த இரண்டு கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமைத் தொகையைக் கூட கலாம் பெற்றுக் கொள்ளவில்லை.
இதய நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட் கருவிகள் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், கலாமின் ஸ்டெண்ட் கருவி ரூ. 7,000 மட்டுமே ஆகும். அதுபோல அவர் கண்டறிந்த எடை குறைந்த காலிபர் செயற்கை கால்களை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஸ்டெண்ட் கருவி மற்றும் செயற்கை கால்களை அணிந்தவர்கள் இதயத்தில் என்றும் கலாம் வாழ்வார்” என்றார்.