மற்றவை

இசை + நடனம் = உடற்பயிற்சி

செய்திப்பிரிவு

இளைஞர்களின் சிந்தனையில் உதிப்பது எல்லாமே புதுமைதானே? மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருக்கும் சுபாஷினி, இசை + நடனம் = உடற்பயிற்சி என்ற புதிய ஃபார்முலாவை மதுரைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘அக்வா ஸும்பா’ என்ற தண்ணீருக்குள் நடனமாடும் உடற்பயிற்சியைச் சொல்லித் தரும் மதுரையின் முதல் பெண் பயிற்சியாளரான சுபாஷினியிடம் பேசினோம்.

“இசை, நடனத்துடன் கூடிய எளிய உடற்பயிற்சி முறைதான் ஸூம்பா. போரடிக்காத, களைப்பைத் தராத, உற்சாகமான இந்த உடற்பயிற்சி முறையைத் தண்ணீரில் செய்தால், அது அக்வா ஸும்பா. 2001-ம் ஆண்டு தென்னமெரிக்காவில் பீட்டோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உடற்பயிற்சி, இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

நடனக் கலை மீதிருந்த ஈடுபாடு காரணமாக, ஆரம்பத்தில் பள்ளி ஆண்டு விழாக்களுக்குத் தயாராகும் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் இந்தப் பயிற்சி பற்றி அறிந்து, அதில் சேர்ந்தேன். காஸ்ட்லியான கோர்ஸ் என்றாலும் கூட, அதற்கேற்ற வேலைவாய்ப்பு இருக்கும் என்று நம்பினேன். அதன்படியே, இப்போது மதுரை கோச்சடையில் உள்ள டைப்ளோஸ் டான்ஸ் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோவில் பயிற்சியாளராக இருக்கிறேன்.

தரையில் நடனமாடுவதைவிட, தண்ணீரில் கை, கால்களைத் தூக்கி, உடலைத் திருப்பி ஆடுவதற்கு அதிக சக்தி தேவைப்படும். தினமும் 1 மணி நேரம் இவ்வாறு செய்தால், 800 முதல் 1500 கலோரி சக்தி எரிக்கப்படும் என்பதால் மாதத்தில் 2 முதல் 5 கிலோ எடை குறைய வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி எலும்பும் மூட்டுக்களும் ஆரோக்கியமாகும் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

உடல்நலத்தைப் பேண யோகா, வாக்கிங், ஜிம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. ஆனால், என்ன காரணத்தாலோ அவர்களால் அதைத் தொடர முடிவதில்லை. ஆனால், நடனத்தை எல்லோருமே என்ஜாய் பண்ணுவதால், இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை” என்கிறார் அவர்.

SCROLL FOR NEXT