மற்றவை

5 கேள்விகள் 5 பதில்கள்: அறிவியல் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை- மருத்துவர் கு.சிவராமன்

கே.கே.மகேஷ்

பாரம்பரிய உணவு, சித்த மருத்துவத்தின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பியிருப்பவர் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையின் பெயரால் பல வதந்திகள் பரப்பப்படும் சூழலில், அவருடன் ஒரு பேட்டி..

உண்மையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கிறார்களா?

தற்போது பரப்பபடுவது பெரும் புரளியாகவே தெரிகிறது. குருணை அரிசியை மாவாக்கி அதில் மரவள்ளிக் கிழங்கு மாவு விட்டமின் மினரல்களை சேர்த்து அச்சில் வார்த்து எடுக்கும் ஆர்ட்டிபீசியல் அரிசி அல்லது போர்திபைடு அரிசியாக இருக்க சாத்தியம் இருந்தாலும், அதன் விலை மிக அதிகம். இவ்வகை அரிசியை சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தயாரித்து வருகின்றன. அதுவும் பிளாஸ்டிக் கிடையாது. அதற்கும் இன்னும் சந்தைப்படுத்த இந்தியாவில் ஒப்புதல் இல்லை.அரசுதான் தெளிவுபடுத்தி மக்களுடைய பீதியைக் களைய வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகில் என்ன பிரச்சினை?

நம் நாட்டில் ஆறேழு மாநிலங்களில் சமையலுக்கு கடுகு எண்ணெயே அதிகம் பயன்படுகிறது. விளைச்சலை அதிகரிப்பதற்காக மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்துகிறோம் என்கிறார்கள். கடுகுச் செடியில் ஒரே பூவில், ஆண், பெண் தன்மைகள் இருக்கும். அதில் ஆண் தன்மையைக் குறைத்துச் சூலுற வைப்பதற்காக மரபணு மாற்றம் செய்திருக்கிறார்கள். இரண்டு ரகங்களை இயற்கை முறையில் கலந்து, வீரிய ஒட்டு ரகத்தை உருவாக்குவதற்கும், மரபணுவை வெட்டி, ஒட்டி புதிய ரகத்தை உருவாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மக்களின் உடல் நலத்துக்கு நிச்சயம் அது தீங்கு விளைவிக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகைத் தடை செய்யக் கோருவதற்கு வலுவான காரணம் இருக்கிறதா?

உணவு உற்பத்தியில் மரபணு மாற்றத்தை அனுமதிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு காரணமாகத்தான், பி.டி. பருத்தியை அனுமதித்த அரசு, பி.டி. கத்தரிக்காயை நிறுத்திவைத்திருக்கிறது. கடுகை அனுமதித்தால் அடுத்தடுத்துப் பல உணவு தானியங்களிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனைக்கு வரும். இந்திய மரபணு பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவே இந்தக் கடுகுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்ய 30 வகையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்றாவது ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எந்த ஆய்வு முடிவையும் வெளியிடாமல், கடுகை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள்.

இயற்கை உணவு, இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் பலர், அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாட்டை அடியோடு எதிர்க்கிறார்களே.. இது சரியா?

இன்றைய விவசாயமே மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான். நவீன அறிவியல் மனித சமூகத்துக்கு அளப்பரிய நன்மைகளைத் தந்துள்ளது. நாங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வணிகத்துக்குள்ளும், காப்புரிமைக்குள்ளும் வைத்துக்கொண்டு, பணம் குவிப்பதையும் எளியவர்களை நசுக்குவதையும்தான் எதிர்க்கிறோம்.

சித்த மருத்துவத்தால் எய்ட்ஸ், புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று சொல்வதை நம்பலாமா?

சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான மருத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை நவீன அறிவியலின் தர நிர்ணயங்களைக் கொண்டு ஆய்வுசெய்து நிரூபிக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். எந்த ஆய்வையும் செய்யாமல் இதை எல்லாம் குணப்படுத்திவிடுவேன் என்று விளம்பரம் செய்வது அயோக்கியத்தனம்.

SCROLL FOR NEXT