தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதித் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கும் வீடுகளை வாங்க மக்களிடம் ஆர்வம் இல்லை என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் சுயநிதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என்று விளம்பரம் செய்கிறது. ஆனால், அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், விண்ணப்பம் பெறுவதற்கான தேதி மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு சென்னை பட்டினப்பாக்கத்தில், 916 சதுரஅடி சொகுசு வீடு விலை ரூ.1.21 கோடி, 1501 சதுர அடி சொகுசு வீடு விலை ரூ.1.99 கோடி. 480 வீடுகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல், நவம்பர் 6-ம் தேதி வரை விண்ணப்பம் கோரப்பட்டது. அப்போது 100 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றன. அதில், 5 பேர் மட்டுமே ரூ.5லட்சம் முன்பணத்துடன் பதிவு செய்தனர்.
11க்கு மட்டுமே முன்பணம்
விலை அதிகம் என்பதால் பலரும் வீடு வாங்க முன்வரவில்லை. எனவே, விண்ணப்பம் வாங்குவதற்கான தேதி டிசம்பர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. திங்கள்கிழமை வரை 190 விண்ணப்பங்கள் விற்றன. 11 பேர் மட்டுமே முன்பணம் கட்டி பதிவு செய்தனர். 480 வீடுகளை விற்கும் சுயநிதித் திட்டத்தில் 11பேர் மட்டுமே வீடு வாங்க முன்வந்துள்ளனர். அதனால், விண்ணப்பம் வாங்குவதற்கான தேதியை 2-வது தடவையாக டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். வரும் 2-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
நொளம்பூரிலும் இதே நிலைதான்
இதுமட்டுமல்லாமல், ஜெ.ஜெ.நகர் கோட்டம், சென்னை நொளம்பூர் கிராமம், சுயநிதித் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 24 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
போதிய விண்ணப்பங்கள் விற்காததால், விண்ணப்ப விற்பனை மற்றும் பதிவு தேதியும் நீட்டிக்கப்பட்டது.
கோவை உப்பிலிபாளையம்
இதுபோல, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதிப் பிரிவில் உப்பிலிப்பாளையம் பகுதி-2-ல்
சுயநிதித் திட்டத்தில் மத்திய வருவாய் பிரிவு மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக 272 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வரை பெறப்பட்டது. போதிய விண்ணப்பங்கள் வராததால் வரும் 23-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் 21-ம் தேதி வெளியிடப்பட்ட விளம்பரத்தில் கூறப்பட்ட நிபந்தனைகள் இதற்குப் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மவுசு குறையும்
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுபோல பல இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுயநிதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. அதனால்தான் காலநீட்டிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
விலையை குறைக்காவிட்டால், வீட்டு வசதிவாரிய வீடுகளுக்கு மவுசு குறைவதை தடுக்க முடியாது என்று உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.