மற்றவை

திருமண நிதியுதவி கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

டி.செல்வகுமார்

திருமண நிதியுதவி கிடைக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தவித்து வருகிறார்கள். இந்த நிதியுதவியைப் பெற ஓராண்டுக்கும் மேல் இழுத்தடிப்பதாக அவர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளை திருமணம் புரிய வரும் நபர்களை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திருமண நிதியுதவி வழங்குகிறது. பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, மாற்றுத்திறனாளிகளை மாற்றுத் திறனாளிகளே திருமணம் செய்துகொள்வது ஆகிய 4 வகைகளாக மாற்றுத்திறனாளி களுக்கான திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த திருமண உதவித் தொகையை திருமண நாளில் அல்லது அதற்கு முன்பு தர வேண்டும். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணமாகி, பல மாதங்கள் ஆகியும் இன்னமும் திருமண நிதியுதவி வழங்கப்படவில்லை.

வெள்ளை அறிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளி நல வாரிய முன்னாள் உறுப்பினர் டி.எம்.என்.தீபக் கூறுகையில், “தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்

திருமணமாகி, 3 மாதம் முதல் ஓராண்டு வரை திருமண நிதியுதவிக் காக காத்திருக்கின்றனர். எனக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் நிதியுதவி கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கியது குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.

மாற்றுத்திறனாளி எம்.ஜி.ராகுல் கூறுகையில், “எனக்கு அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிதியுதவி வழங்கும்படி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்குப் போய் 60 தடவைக்கு மேல் அதிகாரிகளிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். 2 தடவை அமைச்சரையும் சந்தித்துக் கேட்டேன். திருமண செலவுக்காக தர வேண்டிய திருமண நிதியுதவி, எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகியும் கிடைக்கவில்லை. இதனால் முதல்வரின் தனிப்பிரிவில்

கடந்த 11-ம் தேதி புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையரை தொடர்பு கொள்ள பலதடவை முயற்சித்தும் முடியவில்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு முன்னரோ, பின்போ திருமண நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம். முன்பாக இருந்தால் திருமணப் பத்திரிகை, பட்டப்படிப்புச் சான்று, மாற்றுச் சான்று, பிறந்தநாள் சான்று, குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு என்றால், மேற்கண்டவற்றுடன் திருமணப் புகைப்படம், திருமணப் பதிவுச் சான்று ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT