நிரந்தர இருப்பிடமில்லை, மின்விளக்கு வசதிகள் இல்லை, ஆனாலும் இதயத்திலும், தங்களது கூடாரத்திலும் இடமிருக்கிறது என்று, திருநெல்வேலியில் நாடோடிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் புதர்களும், முள்மரங்களும் மண்டியிருக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கொட்டகைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் கட்டப்பட்டிருப்பது வித்தியாசமானதாக இருந்தது. வழக்கமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இத்தகைய ஸ்டார்களை கட்டி, மின்விளக்கு அலங்காரங்களை செய்வர். ஆனால் நிரந்தர குடியிருப்பும், மின் இணைப்பும் இல்லாத நரிக்குறவர் கொட்டகைகள் மீது, கடந்த சில நாட்களாக ஸ்டார்கள் கட்டப்பட்டிருந்தன.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் மக்கள் கூடும் இடங்களில், இவர்கள் பாசி மாலைகள், உத்திராட்ச மாலைகள் போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்து கிறார்கள். கிறிஸ்துமஸ் விழாவை அவர்களும் கொண்டாடுவதை தெரிவிக்கும் வகையில், தங்கள் குடியிருப்புகளில் ஸ்டார்களை கட்டியிருந்தனர்.
மின் வசதி இல்லாததால் பகலில் மட்டுமே இந்த ஸ்டார்கள் பளிச்சிடுகின்றன. கிறிஸ்து பிறப்பை மற்றவர்கள் போல் உண்டு மகிழ்ந்து இவர்கள் கொண்டாடப் போவதில்லை. ஆனாலும், கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் வகையில் ஸ்டார்களை கட்டியிருக்கிறார்கள். `இயேசு பாலன் மாடமாளிகையில் பிறக்கவில்லை. மாட்டுத்தொழுவத்தில், தீவனத்தொட்டியில் பிறந்ததாக கிறிஸ்து பிறப்பு காட்சியை பைபிள் வெளிப்படுத்துகிறது. வி.எம்.சத்திரத்தில் நாடோடிகள் வசிக்கும் தற்காலிக கூடாரத்திலும், அவரது பிறப்பு கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது’ என்று பாளையங்கோட்டை மறைமாவட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.