தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் மீனவர்கள், அறிவியல் பூர்வமான முறையைப் பின்பற்றாததால், உயிரிழப்பும், நோய் தாக்குதலும் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பான முறையில் சங்கு குளிக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் பண்டையக் காலம் முதல் முத்துக்குளித்தலும், சங்கு குளித்தலும் நடந்து வந்தது. இதனால், ‘முத்து நகரம்’ என்று தூத்துக்குடி அழைக்கப்படுகிறது.
முத்துக்குளிக்க தடை
தொடர்ச்சியான முத்துக்குளித்த லால், முத்துப் படுகைகள் அழிந்து போயின. 1961-க்கு பிறகு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் நடைபெறவில்லை. ஆனால், சங்கு குளித்தல் இன்று வரை தொடர்கிறது. சங்கு குளிப்போர், ‘டர்பினெல்லா பைரம்’ எனப்படும், `பால் சங்கை’ குறி வைத்துதான் கடலுக்குள் செல்கின்றனர். இவ்வகை சங்குகள், இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதத்துவம் வாய்ந்தவையாக கருதப்படு கின்றன. சங்கு குளிப்போர், பால் சங்குகளை உயிரோடு கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வருவர். அதன் சதையை மாமிசமாக பயன் படுத்திவிட்டு, சங்கை விற்பனை செய்வர்.
தற்போது, உயிருள்ள சங்குகளை மீனவர்கள் குறி வைப்பதில்லை. கடலுக்கு அடியில், சேற்றில் புதைந்து கிடக்கும் இறந்த சங்குகள்தான் மீனவர்களின் தற்போதைய குறி. இறந்த சங்குகளை பாலிஷ் செய்வது எளிது என்பதால், வியாபாரிகளும் இவற்றைத்தான் விரும்புகின்றனர்.
ஆய்வில் அதிர்ச்சி
சங்கு குளிக்கும் மீனவர்கள் அறிவியல் பூர்வமற்ற முறையை பின்பற்றுகின்றனர். இதில், உயிரிழப்பு அதிகரித்து வருவதாக, `சுகந்தி தேவதாசன்’ கடல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசி ரியர் கே.திரவியராஜ் கூறியதாவது:
கடலில் 20 மீட்டர் ஆழம் வரை மூச்சுப்பிடித்து நீந்திச்சென்று சங்கு குளிப்பர். தற்போது, படகில் ஏர் கம்ப்ரசரை பொருத்தி, 100 மீட்டர் வரை செல்லும் நீண்ட குழாயை இணைத்து, செயற்கை சுவாசம் பெற்று, சங்கு குளிக்கின்றனர். இதற்கான ரெகுலேட்டரை வாயில் வைத்துக் கொள்கின்றனர்.
இரும்புச் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட முகமூடி மற்றும் துடுப்புகளை பயன்படுத்துகின்றனர். கடலுக்கு அடியில், சேற்றில் இறந்த சங்குகளைத் தேடி எடுக்க, 2 சுரண்டிகளையும் கையில் வைத்திருப்பர்.
21 பேர் பலி
கார் டயருக்கு அடிக்கும் காற்றைத்தான் கம்பரசர் மூலம் பயன்படுத்துகின்றனர். முகமூடி போதிய வலுவுடன் இருப்பதில்லை. உபகரணங்கள் அதிக எடையுடன் இருப்பதால், அவசர நேரத்தில் வெளியே வர முடியாது. இம்முறையால் கடந்த 2 ஆண்டுகளில் 21 மீனவர்கள் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிந்தது. இவ்வாறு செயற்கை சுவாசம் செய்வதால் ‘டிகம்ப்ரஸன் சிக்னஸ்’ என்ற நோய் ஏற்படுகிறது.
நோய்க்கான அறிகுறி
இந்நோய் தாக்கினால் மூட்டுக ளில் வலி ஏற்படும். பெரும்பாலான மீனவர்கள் இது சாதாரண வலி என நினைத்து, வலி நிவாரண மருந்தை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் தொழிலுக்கு செல்கின்றனர். இந்நோய் திடீர் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
‘டி கம்ப்ரஸன்’ தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மூரில் வசதி இல்லை. கேரளம் மாநிலம், கொச்சியில் தான் சிகிச்சை பெற முடியும். அறிவியல் பூர்வமான முறையை கடைபிடித்தால் இந்த நோய்களை தவிர்க்கலாம். தூத்துக்குடியில், 1990-களில், சங்குகுளித் தொழிலாளர்கள் 28,440 பேர் இருந்தனர். தற்போது, 200 பேர் சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர், என்றார் அவர்.
ஸ்கூபா டைவிங்
ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:
சங்கு குளிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் அவர்களது தொழிலை நம்பி உள்ளது. இத் தொழிலை அவர்கள் பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ‘ஸ்கூபா டைவிங்’ முறையை பயன்படுத்தினால் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
‘ஸ்கூபா டைவிங்’ முறையில் பயன்படுத்தும் முகமூடி கண்ணாடி எந்த அழுத்தத்தையும் தாங்கும் திறனுடையது. வடிகட்டிய ஆக்ஸிஜனை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் இல்லை. இது அறிவியல்பூர்வமான முறை. மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாப்பான சங்கு குளித்தலுக்கு வகை செய்யும் விதிமுறைகளை மீன்வளத்துறை வகுக்க வேண்டும்.
அரசு மானியம்
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, `சங்கு குளிக்கும் மீனவர்கள், ‘ஸ்கூபா டைவிங்’ உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
மானிய உதவியைப் பெற்று, மீனவர்கள் அறிவியல் பூர்வமான முறையில் சங்கு குளிக்கலாம். சங்கு குளிக்கும் மீனவர்களுக்கு விரைவில் விழிப்புணர்வு பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார் அவர்.