மற்றவை

ரோப் காருக்காக 40 ஆண்டுகளாக காத்திருக்கும் திருச்சி மலைக்கோட்டை: கனவுத் திட்டம் இப்போதாவது கைகூடி வருமா?

அ.சாதிக் பாட்சா

திருச்சியின் பிரதான அடையாளமான மலைக்கோட்டைக்கு ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது 40 ஆண்டு கால கனவு. மலைக்கோட்டையை உள்ளடக்கிய திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் இந்த நேரத்திலாவது அந்தக் கனவு கைகூடி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மலைக்கோட்டை மாநகரத்து மக்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில்..

மலைக்கோட்டைக்கு ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர், ’ரோப் கார்’ வேண்டாம் இழுவை ரயில் அமைக்கலாம் எனவும் அதன் பின்னர், மின் தூக்கி (லிஃப்ட்) அமைக்கலாம் எனவும் பரீசிலனைகள் நடந்தது. பின்னர், 1998-ல் ரூ.3 கோடி மதிப்பில் மீண்டும் ‘ரோப் கார்’ திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், இதற்கான நிதியை திரட்ட முடியாததால் மீண்டும் திட்டம் கிடப்பில் போனது.

2013-ல் மீண்டும், ‘ரோப் கார்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஆஸ்திரியா நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அதுவும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் திட்டம் குறித்து பேச்சு மூச்சு இல்லாத நிலையில், இப்போது திருச்சி மாநகரத்து மக்கள் மத்தியில் ‘ரோப் கார்’ திட்டம் தொடர்பான கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

417 படிகள் இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் திருச்சி சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன்.

“273 அடி உயரமும் 417 படிகளையும் கொண்ட மலைக்கோட்டை செங்குத்தாக அமைந்துள்ளது. மலைக்கோட்டையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகர், நடுப்பகுதியில் தாயுமானவர், உச்சியில் உச்சிப் பிள்ளையார் என 3 சந்நிதிகள் உள்ளன.

மலைக்கோட்டை வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல வரலாற்று சிறப்புமிக்க இடமும்கூட. நாயக்கர்கள், பல்லவர்கள் காலத்து குடைவரைக் கோயில்கள், கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. வரலாற்றை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இது ஒரு கற்றுலா தலம். ஆகவே, இந்தத் தொகுதி எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் போதாவது இந்தத் திட்டத்துக்கு விமோசனம் பிறக்கவேண்டும்.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர்

தினமும் சராசரியாக 3 ஆயிரம் பேர் மலை உச்சிக்கு படிக்கட்டு வழியே ஏறிச்செல்கின்றனர். விடுமுறை தினங்களில் இது இரண்டு மடங்காகிறது. திருவிழா நாட்களில் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மலைக்கோட்டைக்கு படிக்கட்டுகள் வழியாக பயணிக்கிறார்கள். ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத் தப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். திருச்சி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ‘ரோப் காரில்’ பயணித்து திருச்சியின் அழகை மலை உச்சியிலிருந்து ரசிக்க முடியும்.

சறுக்குப்பாறை வழியாகவும், இரட்டை மால் தெரு வழியாகவும் ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்த வழிகள் உள்ளன. இரட்டைமால் தெருவில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் இடத்தை மீட்டு, அங்கேயே ‘ரோப் கார்’ நிலையம் அமைக்கலாம். கிழக்கு புலிவார்டு சாலையில் நகராட்சிக்கு சொந்த மான லூர்துசாமி பூங்கா உள்ளிட்ட இடங்க ளிலிருந்தும் ‘ரோப் கார்’ தடம் அமைக்கலாம்’’ என்று யோசனை தருகிறார் சேகரன்.

திட்டம் அவசியம் - அமைச்சர்

இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் கேட்டபோது,

“மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். என்றாலும், வயதானவர்களும் நடக்க முடியாதவர்களும் மலைக்கோட்டையின் உச்சிக்குச் சென்று சாமியை தரிசிக்கவும், திருச்சியின் அழகை உயரத்திலிருந்து கண்டுகளிக்கவும் இயலாத நிலை உள்ளது. இவர்களின் வசதிக்காக ’ரோப் கார்’ திட்டம் அவசியம் தான்.

ஆனால், ‘ரோப் கார்’ மூலம் மலைமீது மணிக்கூண்டு வரைதான் செல்லமுடியும். உச்சிப் பிள்ளையார் சந்நி திக்குச் செல்ல சுமார் 100 படிக்கட்டுக்களாவது நடக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் சற்று யோசிக்க வேண்டி யுள்ளது. மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே, இதுகுறித்து அற நிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ‘ரோப் கார்’ திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

SCROLL FOR NEXT