ஒரு தனி மனிதன் நினைத்தால், சட்டத்தின் உதவியோடு சமூகத்தில் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியும் என்பதற்கு உதாரணம் மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ். அரசு மருத்துவ மனைகளை ஏழைகளின் சார்பில் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து, வழக்குகள் மூலமாகத் தீர்வு கண்டவர் இவர். மருத்துவச் செயல்பாட்டாளரான ஆனந்துடன் ஒரு பேட்டி:
1. அரசு மருத்துவமனைகள் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி வந்தது?
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பெங்களூரு சென்று கூலிவேலை பார்த்த அப்பா திடீரென நோய்வாய்ப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். 12 லட்ச ரூபாய் செலவு. அப்படியும் காப்பாற்ற முடியவில்லை. அப்போது நான் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தேன். அரசு மருத்துவமனையில் ஏன் அப்பாவைச் சேர்க்கவில்லை என்று விசாரித்தபோதுதான், அதன் அவலங்கள் வெளிவந்தன. பெரிய நோய் வராதவரையில் ஏழைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி வந்துவிட்டால், தலைமுறை தலைமுறையாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு என் சொந்த வாழ்க்கையே ஓர் உதாரணம்.
2. வழக்குகள் மூலம் நீங்கள் சாதித்தது என்ன?
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2010-ல் மட்டும் 900 பச்சிளங் குழந்தைகள் இறந்த தகவலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிக்கொண்டுவந்தேன். குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே இறப்புக்குக் காரணம் என்று தெரியவந்தது. ஒரே இன்குபேட்டரில் இரண்டு, மூன்று குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நான் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக, பச்சிளங் குழந்தைகளுக்கான அதிநவீன மருத்துவக் கருவிகள் எல்லாம் நிறுவப்பட்டன. குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்தது. இப்படிப் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரப் போராட வேண்டிவந்தது.
3. உடல் உறுப்பு தானம் குறித்து ஒரு நீதிமன்ற உத்தரவு பெற்றீர்களே அது என்னவாயிற்று?
மதுரை, கோவை போன்ற நகரங்களில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பொருத்தப்படுவது தொடர்பான பத்திரிகைச் செய்திகளைப் படித்தபோது, முக்கிய உறுப்புகள் எல்லாமே தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றன என்று தெரிந்தது. அரசு மருத்துவமனையிலேயே இதயக் கோளாறுகளுடன் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இருக்கிறபோது, ஏன் தனியாருக்குக் கொடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது அதன் பின்னணியில் பெரிய வணிகம் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கில், உடனடியாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கென தனிப் பிரிவு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் மூன்று ஆண்டுகளுக்குள் இவ்வசதியை ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சென்னையைத் தவிர, இன்னமும் இந்த வசதி உருவாக்கப்படவில்லை.
4. அரசுப் பள்ளிகள் குறித்தும் நிறைய வழக்குகள் போடுகிறீர்களே?
ஆம்! இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்நாள் சம்பாத்தியத்தில் 40 சதவிகிதத்தை குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ, கல்விக்காக மட்டுமே செலவழிக்கிறான். அதாவது, அவனது உழைப்பில் கிட்டத்தட்ட சரிபாதி, மருத்துவ, கல்வி வியாபாரிகளுக்குப் போகிறது. பொது மருத்துவமனை எவ்வளவு முக்கியமோ, அதேபோல பொதுப் பள்ளிகளும் தேவை என்பதற்காகவே வழக்கு தொடுக்கிறேன்.
தமிழகத்தில் கழிப்பறைகள் இல்லாத 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை அமைக்க வேண்டும். அதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டுவதுடன் இரவுக் காவலர்களையும் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அரசோ நிதியில்லை என்கிறது.
5. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கொல்கத்தாவில் தவறான சிகிச்சையால் தன் மனைவி இறந்தது குறித்து வழக்குத் தொடர்ந்த ஒரு மருத்துவர் ரூ. 12 கோடி இழப்பீடு பெற்றார். அவர் மருத்துவர் என்பதால்தான் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்த தவறைக் கண்டுபிடிக்க முடிந்தது. படித்த இளைஞர்கள் தங்களது துறை சார்ந்த விஷயங்களைக் கண்காணித்தாலே, நாட்டில் பாதித் தவறுகளைக் கண்டறிய முடியும்.
இன்னமும்கூட 40 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகமாக பொதுப் பிரச்சினைக்காக மனு கொடுக்கிறார்கள். இளைஞர்கள் பிரச்சினையை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் எழுதுவதைவிட மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நடவடிக்கையில்லை என்றால், அதையே ஆதாரமாக வைத்து நீதிமன்றத்தை நாட முடியும். பாதிக்கப்பட்டவர்களே மனு செய்யும்போது நீதிமன்றம் அதனை மதிப்போடு பார்க்கிறது என்பது என் அனுபவம்!