காஞ்சிபுரத்தில் உழவை நேசித்த ஜமீன்தாரர் ஒருவர் 83 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் உழும் உழவன் படத்துடன் உழவர் என்ற வார்த்தையும் இடம்பெற்ற கரையுடன் கூடிய பட்டுப் புடவையை மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார்.
1930-ம் ஆண்டு காலகட்டத்தில் காஞ்சிபுரம் அடுத்த சந்தவேலூர் ஜமீன்தாரராக இருந்தவர் முனுசாமி முதலியார். இவரது மனைவி மங்களம்மாள். முனுசாமி முதலியார், அப்போது அவரது மனைவிக்கு அளித்த பட்டுப் புடவையில், கரை பகுதியில் உழவர் தனது தோலில் ஏர் கலப்பையை தாங்கி இரு மாடுகளை வயலுக்கு ஓட்டிச்செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் அருகில் உழவர் என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் தங்க ஜரிகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முனுசாமி முதலியாரின் பேரன் எழிலன் கூறியதாவது: எனது பாட்டனார் முனுசாமி முதலியாருக்கு முக்கிய தொழில் விவசாயம். இவர் விவசாயத்தை மிகவும் நேசித்து வந்தார். இவர் கடந்த 1930-ம் ஆண்டு தனது மனைவிக்கு வேலைப்பாடுகள் மிகுந்து பட்டுப் புடவையை வழங்க எண்ணினார். அதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறி பட்டு நெசவாளரிடம் வேளாண் பணியை பிரதிபலிக்கும்விதமாக, பட்டுப் புடவையின் கரை அமைய வேண்டும். அந்த வேலைப்பாடுகளை தரமான தங்க ஜரிகைகளைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி உருவாக்கப்பட்ட புடவையை அவரது மனைவிக்கு பரிசளித்துள்ளார்.
தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், மணமக்களின் படங்கள் புடவைகளில் இடம்பெற வைப்பது எளிதாகிவிட்டது. புகழ்மிக்க சிற்பங்கள், ஓவியங்கள்கூட தற்போது புடவையில் இடம்பெறுகின்றன. ஆனால், சுதந்திரத்திற்கு முன்பு, தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில், பட்டுப் புடவைகளில் உருவங்கள் மற்றும் எழுத்துகளை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது. திறன் படைத்த நெசவாளர்கள் அன்று காஞ்சிபுரத்தில் இருந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்றார்.