வேலைக்கு உணவுத் திட்டப் (150 நாள் வேலைத் திட்டம்) பணிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘சாஸ்டா’(சோஷியஸ் ஆடிட் சொஸைட்டி ஆஃப் தமிழ்நாடு) அமைப்புக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதற்கு அரசியல் பின்னணியே காரணம் என்கிறார்கள்.
கிராமப்புற மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாக வேலைக்கு உணவுத் திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதலில், நூறு நாள் வேலை என்று இருந்ததை இப்போது 150 நாள் வேலையாக மாற்றியுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, நீர்நிலைகள், நீர்வரத்து களை தூர்வாறும் பணிகளை அந்தந்த கிராமமக்களே செய்துவருகிறார்கள். இதற்கு ஒரு நாளைக்கான ஊதியம் 148 ரூபாய் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்தப் பணிக்கு வரு பவர்கள், 42 கன அடி மண்ணை வெட்டி எடுத்தால்தான் ஒரு நாளைக்கான முழுச் சம்பளம் கிடைக்கும்.
முறைகேடு புகார்கள்
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு பஞ்சாயத்து நிர்வாகங்கள் கையில் கொடுக்கப்பட்டதால் பல இடங்களில் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கூட்டணி சேர்ந்து முறை கேடுகளில் ஈடுபட்டனர். இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள் எல்லாம் மண் வெட்டியதாக கணக்கு எழுதி, பணம் சுருட்டுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார்கள் அதிக அளவில் வந்ததையடுத்து, வேலைக்கு உணவுத் திட்டப் பணிகளை கண்காணிக்க சமூக தணிக்கை கூட்டுறவு அமைப்பை (தமிழகத்தில் ‘சாஸ்டா’) ஏற்படுத்தும்படி மத்திய அரசு, கடந்த ஜனவரியில் அறிவுறுத்தி இருந்தது.
பணியாளர்கள் தேர்வு
இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் சமூக தணிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்கென தனி இயக்குநர்களும் நியமிக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக ‘சாஸ்டா’வுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகள் தொடங்கின. மாவட்டத் துக்கு ஒரு வள அலுவலர் (ஊதியம் ரூ.20 ஆயிரம், பயணப்படி ரூ.1,500), ஒன்றியத்துக்கு ஒரு வள அலுவலர் (ஊதியம் ரூ.12 ஆயிரம், பயணப்படி ரூ.1000), கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என மொத்தம் 875 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது.
குறைந்தது ஐந்தாண்டுகள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக இருந்திருக்க வேண்டும் என்பது இந்தப் பணிகளுக் கான முக்கியத் தகுதியாக நிர்ண யிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 12,500 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில், சுமார் 4 ஆயிரம் பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்தப் பணிகள் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. இதுவரை யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை.
தாமதத்துக்கு காரணம் என்ன?
ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங் களில் இதுகுறித்து விசாரித்தபோது வேறு மாதிரியாக தகவல் சொல்கிறார் கள். ‘‘இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் மேன் பவர் கன்சல்டன்ஸி மூலம்தான் நடத்தப்பட்டன. தேர்வான வர்கள் பட்டியலை ரெடி பண்ணி வைத்துவிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில், ‘எதற்காக வெளியில் இருந்து ஆட்களை எடுத்தீர்கள்? நம்மிடமே ஆட்கள் இருக்கிறார்களே.. இதை அப்படியே வையுங்கள். புதிதாக வேறு ஆட்களை எடுத்துக்கலாம்’ என்று மேலிடத்தில் இருந்து சொல்லி விட்டார்கள். இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்கிறார்கள்.
ஆளும் கட்சியினரை காப்பாற்ற திட்டமா?
‘‘பெரும்பாலான உள்ளாட்சி நிர் வாகங்களில் ஆளும் கட்சிக்காரர்களே இருக்கிறார்கள். இந்த நேரத்தில், வேலைக்கு உணவுத் திட்டத்தை கண் காணிக்கும் பணியாளர்களை களத்தில் இறக்கிவிட்டால், முறைகேடுகள் வெளியில் வரக்கூடும். நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகும் நேரத்தில் இது தேவையில்லாத சர்ச்சைகளை உண்டாக்கும் என்பதாலேயே பணி யாளர் நியமனங்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு பணியாளர் நியமனங்கள் நடக்கலாம்.
சாலைப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரி இதிலும் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் கள். மொத்தத்தில், பாலுக்கு பூனையை காவல் வைக்கப் போகிறார்கள்’’ என்றும் சிலர் சொல்கிறார்கள்.