திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் பனியால் நாட்டுக்கொடி வெற்றிலை கருகி வருகிறது. மேலும், விலை வீழ்ச்சியால் போட்ட முதலைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், வக்கம்பட்டி, அய்யம்பாளையம், ரெட்டியார்சத்திரம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சித்தையன்கோட்டை, பஞ்சம்பட்டி உள்பட பரவலாக விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இங்கு உற்பத்தியாகும் வெற்றிலை திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. விவசாயிகள் வெற்றிலைக் கொடியைக் கிள்ளி அதை பாத்தியில் நடவு செய்து, அது படர்வதற்கு அகத்திக் கீரையை ஊடுபயிராக அமைக்கின்றனர். வெற்றிலைக் கொடி அகத்திக் கீரை செடி மீது படர்ந்து வளரும். வெற்றிலை ஓர் ஆண்டுக்குப் பிறகுதான் அறுவடைக்குத் தயாராகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் வெற்றிலைக் கொடிக்கு தண்ணீர் பாய்ச்சி முறையாக பராமரித்து வர வேண்டும்.
வெற்றிலை விலை வீழ்ச்சி
கடந்த இரு ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை ஏமாற்றி விட்டது. இதனால், வறட்சியால் விவசாயிகள் வெற்றிலைச் செடிகளை காப்பாற்ற முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் கடும் பனியால் வெற்றிலைச் செடிகள் கருகி வருகின்றன.
அதனால், தரமில்லாததால் திண்டுக்கல் வெற்றிலைக்கு சந்தைகளில் வரவேற்பு குறைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்தும் மானாவாரியாக பயிரிடப்படும் வெற்றிலை, திண்டுக்கல் மற்றும் மதுரை சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ. 70-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து, வெற்றிலை விவசாய சங்கத்தைச் சேர்ந்த பஞ்சம்பட்டி மாங்குடி ராஜீ கூறுகையில், தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பயிரிடப்படும் நாட்டுக்கொடி, சின்னக்காம்பு வெற்றிலைக்கு தனி மவுசு உள்ளது. திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா மற்றும் இதர விழாக்களில் அதிகமாக பயன்படுத்துவது சின்னக்காம்பு வெற்றிலைதான். கிராமங்களில் கூட பெரியவர்கள் முன்பு வெற்றிலையைத் தான் அதிக அளவில் ஜீரண சக்திக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இளைஞர்கள் பான்பராக், புகையிலை போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் வெற்றிலை போடுவதை விரும்புவது இல்லை. வெற்றிலை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்றால்தான் லாபம் கிடைக்கும். தற்போது போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாமல் நஷ்டமடைந்துள்ளோம்’’ என வேதனையுடன் தெரிவித்தார்.