தூத்துக்குடி மாவட்டத்தில், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயறு அறுவடை தொடங்கியுள்ளது. போதிய மழை இல்லாததால், பயிர்கள் கருகி 20 சதவிகித மகசூல் கூட கிடைக்கவில்லை. விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியை வறட்சி மாவட்ட மாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மானாவாரி சாகுபடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் அதிகம். வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயம் இருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால், விவசாயப் பரப்பு சுருங்கி வருகிறது. இந்த ஆண்டாவது போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி விவசாயிகள் மானாவாரியாக உளுந்து, பாசிப்பயிறு, மக்காசோளம், கம்பு போன்றவற்றை சாகுபடி செய்தனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. முதலில் சில நாட்கள் பருவமழை நன்றாக பெய்ததால் பயிர்கள் முளைத்து வேகமாக வளரத் தொடங்கின. அதன் பிறகு மழை சரியாக பெய்யவில்லை. பெரும்பாலான பயிர்கள் கருகிவிட்டன. கடந்த வாரம் இரு தினங்கள் பெய்த மழையும் பயிர்களை காப்பாற்ற உதவவில்லை.
கண்ணீரோடு அறுவடை
கருகியது போக மிச்சம் மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி- மதுரை சாலை, தூத்துக்குடி- திருநெல்வேலி சாலை போன்ற சாலைகளில், விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களை அறுவடை செய்து உலர வைத்து, பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்ணீரோடு விதைப்பவன், மகிழ்ச்சியோடு அறுவடை செய்வான் என்பது பழமொழி. ஆனால், இங்கோ மகிழ்ச்சியோடு விதைத்த விவசாயிகள் கண்ணீரோடு அறுவடை செய்து வருகின்றனர். பயிர்களில் 20 சதவிகித மகசூல் கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியை அடுத்த புதூர்பாண்டியாபுரம் பகுதியில் சாலையில் பாசிப்பயறு செடிகளை உலர வைத்து, மணிகளை தனியாகவும், பதருகளை தனியாகவும் பிரித்து கொண்டிருந்த ஏ.ராமேஸ்வர லிங்கம் கூறுகையில்,
ஒரு ஏக்கரில் பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிரிட்டேன். இதில் பெரும்பாலான பயிர்கள் வறட்சியால் கருகிவிட்டன. மீதமுள்ள பயிர்களை தற்போது அறுவடை செய்துள்ளேன்.
ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்தேன். அடியுரம், 2 முறை பூச்சி மருந்து என பராமரித்தேன். ஆனால், தற்போது ஏக்கருக்கு 25 கிலோ பாசிப்பயறு மட்டுமே கிடைத்துள்ளது. இது ரூ.2ஆயிரத்துக்கு மட்டுமே விலை போகும். பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலைமை மோசம். கடந்த ஆண்டு கூட ஏக்கருக்கு 50 கிலோ வரை மகசூல் கிடைத்தது. மழை பொய்த்துப் போனதே இதற்கு காரணம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.
3 லட்சம் ஏக்கர் பாதிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கே.பி.பெருமாள் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிப்பு அதிகம். 20 சதவிகிதம் கூட மகசூல் கிடைக்கவில்லை. பாசிப்பயறு, உளுந்து போன்றவற்றில் ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு 50 கிலோ கூட கிடைப்பது கஷ்டம்.
மக்காச்சோளம் பயிர்களை பொறுத்தவரை கதிர் வந்த நிலையில் கருகிவிட்டன. ஒரு சில இடங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சிறிதளவு பயிரை காப்பாற்றியுள்ளனர். மற்றபடி முற்றிலும் கருகிவிட்டன. இதேபோல் கம்பு உள்ளிட்ட பயிர்களிலும் மகசூல் கிடைக்கவில்லை.
நிவாரணம் வேண்டும்
எனவே, தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டதால், தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவித்தது. இந்த ஆண்டு ஒரு சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு பிரிமீயம் வசூல் செய்யவில்லை. இதனால், விவசாயிகளுக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. ஏற்கனவே கடந்த ஆண்டு செலுத்திய பிரிமீயத்துக்கான காப்பீட்டு பணம் இதுவரை கிடைக்கவில்லை.
ஜன.20-ல் ஆர்ப்பாட்டம்
இதனை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் திங்கள்கிழமை (ஜன.20) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளோம். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.