மற்றவை

கோவை: உப்பைத் தின்ற யானைகள்... ஊரை துவம்சம் செய்கிறது..!

கா.சு.வேலாயுதன்

உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்-இது பழமொழி; உப்பைத் தின்ற யானைகள் என்ன செய்யும்? வீட்டை உடைத்து, ஆளை மிதித்து, ஊரையே கபளீகரமாக்கும். விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, இந்த ரீதியான யானை-மனித மோதலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று, விநோத கோரிக்கை வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

சில சம்பவங்கள்...

நீலகிரி மாவட்டம், தேவாலா முண்டக்குன்னு ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். இவரது வீட்டில் நுழைந்த யானைகள், அரிசி, பருப்புடன், அங்கிருந்த ஒரு மூட்டை துணியையும் சாப்பிட்டு விட்டது. வனத்துறையினரிடம் மாதனின் முக்கிய புகாரே ‘எங்க குடும்பத்துல, யாருக்கும் உடுத்தறதுக்கு துணியே இல்லீங்க. அதுக்கு உதவி பண்ணுங்க’ என்பதுதான்.

கூடலூர் அருகே லாஸ்டன் என்ற கிராமத்தில் சத்துணவுக்கூடத்தை உடைத்து புகுந்த யானைகள், அரிசி பருப்புடன் விரும்பி சாப்பிட்டது, மூட்டையிலிருந்த உப்பை. அதன் அருகே உள்ள அண்ணா நகரில், காலை 11.00 மணிக்கு, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராசையா என்பவரை, யானை தூக்கிப்போட்டு மிதித்து கைகால்களை உடைத்து விட்டது. இவை, கடந்த சில ஆண்டுகளில், நிகழ்ந்த சம்பவங்கள்.

இந்த சம்பவங்களுக்கும், உப்பை தின்னும் யானைகளுக்கும் சம்பந்தம் உண்டு என்கிறார், சூழலியல் ஆர்வலரும், கூடலூர் விவசாயத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவருமான எம்.எஸ்.செல்வராஜ்.

அவர் கூறியதாவது:

ஆசிய இன யானைகள் அதிகம் வாழ்வது, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமாகும். 5,520 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட கூடலூர் பசுமை மாறாக்காடுகளுக்கு அருகில்தான் முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர், முக்குருத்தி, நாகர்ஹோலா என்ற 5 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றி, பாரம்பரியமிக்க பழங்குடிகளும், இதர வனம் சார்ந்த, இயற்கை வாழ்வு வாழும் மக்களும் வசிக்கின்றனர்.

வருடத்தில் ஒரு முறை, சிலமாதங்கள் மட்டும்தான், மக்கள் வாழும் பகுதிகளில், யானைகளை, அதுவும் இரவு 9.00 முதல் 10.00 மணிக்கு மேல் பார்க்க முடியும்.

அண்மையில், நடுகாணியில் ஒரு ஆளை பகலிலேயே அடித்துக்கொன்றது யானை. சில மாதங்கள் முன்பு, வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை, மசினக்குடியில் கொன்றது; அதுவும் பகல்நேரம்தான்.

இதுபோன்ற யானைகளின் செயல்பாடுகளுக்கு வனத்துறையினரும், இதைச் சார்ந்தவர்களும், இங்கு வசிக்கும் மக்கள் மீதே பழியை போட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.

யானைகளுக்காக ஒதுக்கப்பட்ட சரணாலயங்களிலும், இதரக் காடுகளிலும், பார்த்தீனிய விஷச்செடிகள், உண்ணிச்செடிகள் (லேண்டா), தேக்கு மரங்கள் மட்டுமே உள்ளன. ஒரு நாளைக்கு, 250 கிலோ உணவு சாப்பிடும் யானைகள் இவற்றை, முகர்ந்து கூட பார்க்காது. யானைகளின் முக்கிய உணவாக இருந்து, பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பில் பல்கியிருந்த மூங்கில் காடுகள், இப்போது சுத்தமாக அழிந்தே போய்விட்டன.

முற்றிய மூங்கில்களை, முறையாக வெட்டி எடுத்துவந்தால்தான், மீண்டும் புதுப்புது கிளைகள் தோன்றி, மூங்கில்கள் நிரந்தரமாக இருக்கும். அதை பாரம்பரியமாக பழங்குடிகள் செய்து வந்தனர்.

இயற்கையோடு இணைந்த இச்செயல்பாட்டுக்கு, வனத்துறையினர் தடை செய்ததால், முற்றிய மூங்கில்களின் வாழ்நாளான 45 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவை முற்றிலும் அழிந்து விட்டன.

இப்போது, காடுகளில் மூங்கில் வளர்க்க, நாற்றுக்களை உருவாக்குகிறார்கள். இது உடனடியாக பலன் தராது. இந்த தவறான இயற்கைச் சூழல் மாற்றத்தால், புவி வெப்பமடைந்து யானைகளும், இதர உயிர் இனங்களும், உண்ணும் தாவரங்கள் அழிந்தே போய் விட்டன.

இதற்கிடையேதான், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரங்களில் உப்பு, புளிகளைப் போட்டு, சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க, காட்டு யானைகளை வரவழத்தனர். பொதுவாக சீசன் காலங்களில், ஒரு வகை உப்பு மண்ணையும், உப்புத்தன்மையுடைய தாவரங்களையும், வனத்திலேயே தேடி உண்ணும் வழக்கம் கொண்டது யானைகள். சாலையோரங்களில் கடல்உப்பு கிடைப்பதையறிந்து இதை, சாப்பிட வரஆரம்பித்தன. அதை உண்டு பழகிய யானைகள், தினம் தினம் சாலைக்கு வர, சுற்றுலாப் பயணிகள், இதை கண்டு ரசித்தனர்.

யானைக்காக உப்பு வாங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக, வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.

சூழல் ஆர்வலர்களும், இந்த உப்பு போடும் விஷயத்தில் எதிர்ப்புக்களை கிளப்பினர். எனவே, இச்செயலை நிறுத்திவிட்டது வனத்துறை. ஆனால், உப்பு சாப்பிட்டுப் பழகின யானைகள், அந்த சுவைக்காக, ஊருக்குள் புக ஆரம்பித்துவிட்டன. சத்துணவுக்கூடங்கள், வீடுகள், டீக்கடைகள் என காட்டு யானைகள் எங்கு நுழைந்தாலும், முதலில் சாப்பிடுவது உப்பு, புளியைத்தான்.

ஆதிவாசிகள் கடும் உழைப்பாளிகள். அவர்களின் ஆடைகளில் மிகுதியான வியர்வை இருக்கும். அந்த உப்பு வியர்வையுள்ள துணிகளைக்கூட விடாமல், அதையும் சாப்பிடுகின்றன. மனித உடம்பு ரத்தத்தில், உப்பு சுவை மிகுதி. போகிற போக்கில் மனிதனை அடிக்கும்போது, சில யானைகள் அவன் ரத்தத்தையும் சுவைத்து பார்ப்பதும் நடக்கிறது.

அதுவும், யானைகளுக்குப் பழகிப்போனால் நிலைமை என்னவாகும்? எனவேதான் தற்போது, யானைகளின் பண்பும், குணாம்சமும், நாம் செய்த தவறுகளால் மாற்றம் கண்டுள்ளது. அதை, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தி, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, வலியுறுத்தி வருகிறோம், என்றார்.

SCROLL FOR NEXT