கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்கீழ் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது 2 நாளில் பூண்டி ஏரியை வந்தடையும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி கூறினார்.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் திறந்துவிட வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 1.8 டி.எம்.சி. தண்ணீர்தான் வந்துள்ளது. கிருஷ்ணா நீர் கால்வாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக பூண்டி ஏரிக்குத் தேவையான அளவு தண்ணீர் வரவில்லை.
கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்தது. தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள உப்பளமடுகு என்ற இடத்தில் கிருஷ்ணா நீர் கால்வாய் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனால் கிருஷ்ணா நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது.
புதிதாக மதகு
பின்னர், தமிழக அரசு கேட்டுக் கொண்டதையடுத்து, அந்த இடத்தில் புதிதாக மதகு அமைக்கும் பணியை ரூ.6.69 கோடி செலவில் ஆந்திர அரசு தொடங்கியது. இப்பணி முடியும் வரை, கிருஷ்ணா நீர் செல்வதற்கு வசதியாக அந்த இடத்தில் குழாய் அமைக்கப்பட்டு, வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உப்பளமடுகு என்ற இடத்தில் மதகு அமைக்கும் பணி வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெள்ளிக்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் 2 நாளில் 177 கி.மீ. தொலைவை கடந்து பூண்டி ஏரியை வந்தடையும்’’ என்றார்.
பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தற்போது 3,191 மில்லியன் கனஅடிதான் நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி ஆகும். கடந்த ஆண்டு இதேநாளில் 5,372 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.