மற்றவை

மதுரை மகளிர் தனிச்சிறையில் 200 கைதிகளுக்கு இடம்

அ.வேலுச்சாமி

மதுரை மத்திய சிறை வளாகத்தின் 3-வது பிளாக்கை மகளிர் தனிச்சிறையாக மாற்றியமைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இங்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த 200 பெண் கைதிகளை வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுந்தொலைவு பயணம்

தமிழகத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண்களைக் கைது செய்து அடைப்பதற்காக புழல், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் மகளிர் தனிச் சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 8 இடங்களில் கிளை சிறையும், 3 இடங்களில் சிறப்பு துணைச் சிறையும் பெண்களுக்கென அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி 156 தண்டனைக் கைதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 468 விசாரணைக் கைதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 35 விசாரணைக் கைதிகள், டி.பி.டி.ஏ. சட்டத்தின் கீழ் கைதான 40 கைதிகள் என 699 பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண் கைதிகள் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக இவர்களை ஒவ்வொரு முறையும் தென் மாவட்டங்களுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் நிதி விரயமும் ஏற்பட்டது. அதேபோல் சிறையிலுள்ள பெண் கைதிகளைப் பார்க்க அவர்களது உறவினர்களும், வழக்கறிஞர்களும் நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை இருந்து வருகிறது.

எனவே இவற்றைத் தவிர்க்க தென் மாவட்டங்களுக்கென தனி மகளிர் சிறை அமைக்க வேண்டும் என சிறைத் துறை நிர்வாகம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 10-ம் தேதி சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மதுரையில் மகளிருக்கென தனிச் சிறையை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

அடிப்படைப் பணிகள் தொடக்கம்

இதன்படி மதுரை மத்திய சிறை வளாகத்திலுள்ள 3-வது பிளாக்கை மகளிர் சிறையாக மாற்றுவதற்கான அடிப்படைப் பணிகளைத் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு 200 கைதிகளை அடைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் அதற்கேற்ப குடிநீர், கழிப்பிடம், அறை அமைத்தல் போன்றவற்றை ரூ.44 லட்சம் செலவில் மேற்கொள்வது குறித்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதவிர இங்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட 94 பணியிடங்களை தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனவே அவர்களுக்காக ரூ.8.5 கோடி செலவில் குடியிருப்பு வளாகம் கட்டப்பட உள்ளது. மேலும், சிறை நிர்வாகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள், கணினிகள், ஆயுதங்கள், சமையலறை, மருந்தகம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், இந்த மகளிர் சிறை செயல்படத் தொடங்கியதும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கைதாகும் பெண்களை இங்கு அடைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்மூலம் தென்மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை பெண் கைதிகளை இனி திருச்சிக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபற்றி சிறைத்துறை மதுரை டிஐஜி முகமது அனீபாவிடம் கேட்டபோது அவர் கூறியது:

மதுரை மத்திய சிறை வளாகத்திலுள்ள 3-வது பிளாக்கை மகளிர் தனிச்சிறையாக மாற்றிக்கொள்ள அனுமதியளித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே அந்த பிளாக்கை தனியாகப் பிரித்து, தனி நுழைவுவாயிலுடன் உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. இங்கு 200 கைதிகளை தங்க வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

சிறையில் சில வசதிகள்

இந்த மகளிர் சிறையில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்காக ரூ.7 லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இரவு நேரத்திலும் துல்லியமாகத் தெரியும் வகையிலான பைனாகுலர், மெட்டல் டிடெக்டர், பைகள் மற்றும் பொருள்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம், ரோந்து வாகனம் போன்றவையும் வாங்கப்பட உள்ளன. இதுதவிர ரூ.7 லட்சம் செலவில் வீடியோ கான்பரன்சிங் மையம் அமைக்கப்படுகிறது. மின்தடையைச் சமாளிக்க ரூ.5 லட்சத்தில் ஜெனரேட்டர் பொருத்தப்படுகிறது என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT