மனநலம் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுக்கு முன் உறவுகளை பிரிந்து வீதிக்கு வந்த பட்டதாரி இளைஞரை அவரது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியைச் சேர்ந்த தொண்டு நிறுவன இளைஞர் சேர்த்து வைத்துள்ளார்.
சுற்றுலா தலத்தில் அவலம்
சர்வதேச கடற்கரை சுற்றுலா த்தலமான கன்னியாகுமரியில் எப்போதும் பயணிகள் நெருக்கத் துடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும். இச்சூழலில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும், முதியவர்களையும் அழைத்து வரும் சில ஈவு இரக்கமற்றவர்கள் தங்கள் உறவுகளை மறந்து, அவர்களை இங்கேயே உதறி விட்டு செல்லும் கொடுமை அதிகம் நடபதுண்டு.
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அதிகமான மனநோயா ளிகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதை பார்க்க முடியும். இவர்களின் உணவுத் தேவையை சார்தீப் தொண்டு நிறுவனம், ‘அன்னபூர்ண யாத்ரா’ என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றது.
மதிய உணவு
இந்த திட்டத்தின் மூலம் ஒரு வாகனத்தில் தினம், 100 மன நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாகனம் கன்னியாகுமரி அடுத்த அச்சன்குளத்தில் இருந்து புறப்பட்டு, அழகப்பபுரம், அஞ்சுகிராமம், லீபுரம், கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், கோட்டாறு, பார்வதிபுரம் வழியாக வடசேரி வரை செல்லும்.
இந்த வழியில் இருக்கும் மன நலம் குன்றியோருக்கு உணவும் வழங்கி வருகின்றனர். இத்திட்டம் இன்று, நேற்று அல்ல கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிறுவனத்தின் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு முழுக்க இலவச சேவையான மனநோயாளிகள் சார்தீப் ஹோம் ஒன்றும் அச்சன்குளத்தில் தொடங்க ப்பட்டுள்ளது. இங்கு இருந்த ஒரு மனநோயாளியின் சுய விபரம் தெரிய வர, அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் குடும்பத்தினருடன் வந்து ஞாயிற்றுக் கிழமை மனநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் வீட்டுப் பிள்ளையை அழைத்து சென்றனர்.
ஆர்வத்தை தந்த ஆட்சியர்
இந்நிறுவனத்தை நடத்தி வரும் மணிகண்டன் கூறியதாவது:
நாங்க கொஞ்ச வருசமா மன நோயாளிகளுக்கு உணவு கொடுத்துட்டு இருந்தோம். ஒரு முறை ஆட்சியர் நாகராஜன் எங்களிடம், “நீங்க மன நோயாளிகளுக்கு ஆறுதலாக ஒரு ஹோம் தொடங்கினா இன்னும் நிறைய பேருக்கு அது ஆறுதலா இருக்கும்ன்னு” சொன்னாங்க. கூடவே வேலூர்ல கலெக்டரா இருந்தப்போ ஒரு ஹோம் விசிட் பண்ணுண அனுபவத்தையும் சொல்லி, அது சம்பந்தமா செய்தித்தாளில் வந்த செய்திகளையும் கொடுத்தார்.
ஆட்சியர் தந்த உற்சாகத்திலும், மன நோயாளிகளுக்கு உதவணு ம்ன்னு தான் இந்த ஹோமை தொடங்கினோம். இதில், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஒடிஸா என இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15 மன நோயாளிகள் இருக்காங்க.
எங்க ஹோம்ல இருக்குற மனநோயாளிகள் ஒவ்வொரு வரிடமும் பேசி, பேசி முடிஞ்ச அளவுக்கு அவுங்களை பத்துன தகவலை வாங்கினோம். அப்போ தான் ஒரு மனநோயாளி ஓரளவு புரிஞ்சுகிட்டாரு. அவருகிட்ட ஒரு பேப்பரும், பேனாவும் கொடுத்து ஏதாவது எழுதுங்கன்னு சொன்னதும் ஒரு கல்லூரி முகவரி எழுதுனாரு. அதில் விசாரிச்சப்ப தான் அவர் பேரு ராமசாமின்னும், திருப்பூர் மாவட் டம், வெள்ளக்கோவில் அடுத்த மேட்டாங்காட்டு வலசையைச் சேர்ந்த பழனிச்சாமி மகன்னு தெரிந்தது என்றார் அவர்.
இனி பாதுகாப்போம்
ராமசாமியின் சகோதரர் முத்துசுவாமி கூறியதாவது:
எங்க அண்ணன் பி.பி.எம். வரைக்கும் படிச்சுருக்காரு.8 ஆண்டுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டிருச்சு. 3 ஆண்டுக்கு முன் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் சேர்த்தோம். அங்க இருந்து எப்படியோ தப்பிச்சு போயிட்டாரு. நாங்க ஒவ்வொரு ஊரா தேடிப் போய் பார்த்தோம் கிடைக்கல.
அப்போ தான் அண்ணன் படிச்ச கல்லூரியில் இருந்து கன்னியாகுமரியில் இருக்குறதா தகவல் வந்துச்சு. ரொம்ப சந்தோசமா இருக்கோம். மன நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் எங்க வீட்டு பிள்ளை அவன். இத்தனை ஆண்டாய் தொலைச்சுட்டோம். இனி எங்க கண்காணிப்பில் பத்திரமா வைச்சிருப்போம் என்றார் அவர்.
ராமசாமியை அழைத்து செல்ல வந்திருந்த குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் சந்தோஷம்.ராமசாமியிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற போது, “வீட்டுக்கு போறேன்...வீட்டுக்கு போறேன்.” என்ற ஒற்றை வார்த்தையை முக மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து கொண்ட போது, 3 ஆண்டாய் உறவுகளை பிரிந்திருந்த வேதனையையும் மீறிய அவரது சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பெற்றோர் நிராகரிப்பு
ஒரு சில மனநோயாளிகளை வீட்டில் உள்ளவர்கள் சுற்றுலாத் தலங்களில் விட்டு செல்கின்றனர். இவர்களது ஹோமில் உள்ள ஒரு மனநோயாளி வீட்டு முகவரியை கொடுத்திருக்கின்றார். அவரது தந்தை மிகப் பெரிய வங்கி ஒன்றில் மேலாளர். ஹோம் தரப்பில் இருந்து பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் வீட்டு தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது வேதனையை தரும் செய்தியானது.
தன்னை ‘ஹைதராபாத்’ என சொல்லிக் கொள்ளும் மன நோயாளி ஒருவரின் பெயர் கூட அவருக்கு தெரியாததால், இவர்களே, ‘நிசாந்த்’ என பெயர் வைத்துள்ளனர். இவரது கடந்த காலம் பற்றி இவருக்கு தெரியவில்லை. இதே போலவே ஒவ்வொரு மன நோயாளியின் பின்னால் வலுவான ஏதோ ஒரு கரு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
மன நலம் பாதிக்கப்பட்டோர்களையும், முதியோர்களையும் உறவினர்களே உதறித்தள்ளும் நிலையில், அவர்களை பாதுகாத்து, உணவு உள்ளிட்ட மனித வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் நிறைவு செய்து, பாதிக்கப்பட்டவர்களை உறவுகளைத் தேடி ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மணிகண்டனின் மனித நேயத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.