குறைந்த விலை வீட்டு மனைகளை வாங்குவதற்கான மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அலுவலகத்தில் 35 ஆயிரம் பேர் குவிந்தனர். இதுவரை மொத்தம் 72 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குறைந்த விலை மனைசென்னையில் மணலி மற்றும் மறைமலை நகரில் குறைந்த விலை வீட்டு மனைகளை விற்க சிஎம்டிஏ கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மேற்கண்ட இரண்டு இடங்களிலும் 200-க்கும் மேற்பட்ட மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.2.96 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் மனைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
வீட்டுமனை விற்பனை அறிவிப்பு பற்றிய செய்தியை “தி இந்து” முதன்முதலில் கடந்த மாதம் வெளியிட்டது. அது முதல், மனுக்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களைச் சமர்ப்பித்தனர். அன்று வரை 35 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே மனுக்களை வாங்க சிஎம்டிஏ அலுவலகம் முன்பாக பொதுமக்கள் குவிந்தனர். மனுக்களை வாங்க சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து நிறுத்தம்
நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், எழும்பூர் அலுவலகத்தையும் கடந்து சாலை வரையில் கூட்டம் நீண்டது. மேலும், சாலையில் இரு பக்கங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அச்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
காலை 8 மணிக்கு வந்தவர்கள், மனு கொடுக்க சுமார் 5 மணி நேரம் ஆனது. எனினும், சென்னையில் தங்களுக்குச் சொந்த இடம் கிடைத்துவிடாதா என்ற ஆசையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து மனுக்களைக் கொடுத்துவிட்டு சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு மேலும் மனுக்கள் பெறப்பட்டன.
‘’கடைசி நாளில் சுமார் 35 ஆயிரம் மனுக்கள் வரை பெறப்பட்டன. இதைத் தவிர தபால் மூலம் பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பிரிக்கப்படாமல் உள்ளன. மொத்த, மனுக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது’’ என்று அதிகாரிகள் கூறினர். இதற்கான குலுக்கல் 8-ம் தேதி நடக்கிறது.