வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டில் முதல் சீட்டைப் போன்றது விவசாயம். அது சாய்ந்தால் எல்லாமே விழுந்துவிடும். வறட்சியால் தொழில் பாதிக்கப்பட்ட நெல் மூட்டை தூக்கும் தொழிலாளி ராமமூர்த்தியுடன் பேசினேன்.
உங்கள் வேலையைப் பற்றி...
மதுரை மாட்டுத்தாவணி ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் மூட்டை தூக்குகிறேன். மதுரை மாவட்டம் குலமங்கலம்தான் சொந்த ஊர். விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை லாரியில் இருந்து இறக்குவதற்கு மூட்டைக்கு 2 ரூபாய் 50 பைசா கூலி. 10 பேர் சேர்ந்து 400 மூட்டைகளை இறக்குகிறோம் என்றால், ஒரு ஆளுக்கு 100 ரூபாய் கிடைக்கும். அதே நெல்லைக் கொட்டி, எடை போட்டு, திரும்ப மற்றொரு லாரியில் ஏற்றுவதற்கு மூட்டைக்கு 4.75 ரூபாய் கூலி. அதாவது 10 பேர் 400 மூட்டை ஏற்றினால் தலைக்கு 190 ரூபாய் கெடைக்கும். மிகவும் கஷ்டமான வேலை.
இந்த வருஷம் வேலை பாதிப்பு அதிகம் இருக்குமே?
இந்த வருஷம் அணையில் இருந்து ஒரு நாள் கூட தண்ணீர் திறக்காததால், கிணத்துப்பாசன விளைச்சல் மட்டும்தான் அறுவடையாகி வருகிறது. சுமார் 4,000 பேர் வேலை பார்த்த இந்த இடத்தில், இந்தாண்டு வெறும் 500 பேருக்குக்கூட வேலையில்லை. வியாபாரிகள், தரகர்கள், லாரிக்காரர்கள், டீக்கடைக்காரர் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நெல் விளைச்சல் குறைவு மக்களைப் பாதிக்குமா?
விளைந்த நெல்லை ஒரு தாலுகாவைவிட்டு இன்னொரு தாலுகாவுக்குக் கொண்டுபோகக் கூடாது என்று சட்டமிருந்த காலத்தில்தான், பஞ்சம் எல்லாம். இப்போது ஒடிஷா, ஆந்திரம், கர்நாடகம் என்று எங்கிருந்தாவது நெல் வந்துவிடுகிறது. ஆனால், உள்ளூரில் நெல் விளைந்தால்தான் சம்சாரிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் சோறு. இத்தனை மூட்டை தூக்கும் நாங்கள், அரிசிக் கடைக்குப் போனால் சிப்பம் (25 கிலோ) 700, 800 ரூபாய்க்குள் வரும்படியான அரிசிதான் வாங்குவோம். இந்த முறை அது சரியாக விளையவில்லை!
ரேஷன் அரிசி மட்டும் ஏன் நாறுகிறது?
சரியான ஈரப்பதம் பார்த்துக் கொள்முதல் செய்வது, அதைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் அரைத்து அரிசியாக்குவது, ‘பாலீஷ்’ செய்வது என்று தனியார் ஆலைகள் எங்கேயோ போய்விட்டன. அரசாங்கத்திடம் நெல் கொள்முதலிலேயே கோளாறு இருக்கிறது. மூட்டைகளை ரொம்ப நாள் இருப்பு வைப்பது, அரிசியில் பூச்சி பிடிப்பது, அதற்காக அடிக்கிற மருந்து என்று ரேஷன் அரிசியின் மணத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், சத்தில் எந்தக் குறையும் கிடையாது. ரேஷன் அரிசியை வெந்நீரில் கழுவிச் சமைத்தால், நாற்றமும் வராது. அதைச் சாப்பிடுற நான் மூட்டை தூக்குறேன். எங்கே நீங்கள் ஒரு மூட்டையைத் தூக்குங்கள் பார்ப்போம் (சிரிக்கிறார்).
பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இருக்கிறதே?
எங்களைத் தேடிவந்த ஒரே அரசுத் திட்டம் இதுதான் (சிரிக்கிறார்.) மூட்டை தூக்குகிறவர்களின் பெரிய பிரச்சினை கால் வலியும் குறுக்கு வலியும். வாலிப வயதென்றால், நன்றாகத் தூங்கி எழுந்தாலே எல்லா வலியும் பறந்துவிடும். ஆனால், இப்போது நிறைய பேர் ‘கடை’க்குப் போகிறார்கள். வருமானத்தில் பாதி நாட்டுக்கு, மீதிதான் வீட்டுக்கு என்றாகிவிட்டது. இது தவறுதான்!