மற்றவை

நாகர்கோவில்: குமரியில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

என்.சுவாமிநாதன்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி யில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இப்போது அவர்களுக்கு இணையாக, சர்வதேச அளவிலான பறவைகளும் குமரிக்குப் படையெடுக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பருவ காலத்திலும் மழை பெய்வதால், ஆண்டு முழுவதும் நீர் நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது. உணவு, பாதுகாப்பு, புகலிடம் தேடி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு, பறவை இனங்கள் வருகின்றன. உள்நாட்டுப் பறவைகளான முக்குளிப்பான், நீர்காகம், பாம்பு தாரா, புள்ளி மூக்கு தாரா, கூழக்கடா, பெரிய வெண் மூக்கு, குருட்டு கொக்கு, சாம்பல் கொக்கு, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாய் மூக்கன், பூ நாரை, வெள்ளை மீன் கொத்தி மற்றும் பல பறவைகள் வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து ஊசி வால் வாத்து, வரித்தலை வாத்து, டெர்ன் உள்பட பல பறவை இனங்கள் வருகின்றன. ஆண்டு முழுவதும் பறவைகள் குமரிக்கு வருவதால் விவசாயத்திற்கும் கைகொடுப்பதாக சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சன்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் வட பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கடுங்குளிர் நிலவுவதால், பறவைகள் நல்ல சீதோஷ்ண நிலைக்கு கன்னியாகுமரி நீர்நிலைக்குப் படையெடுக்கின்றன. நமது மாவட்டத்தை நாடி உணவு, உறைவிடத்துக்காகப் புகலிடம் தேடி வருகின்ற பறவைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

உலக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்கம் நிறைந்த 15 இடங்களில், கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. யுனெஸ்கோ நிறுவனத்தால் இயற்கைச் சூழல் பாரம்பரியம் நிறைந்த இடமாக கன்னியாகுமரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்தை கணக்கிட்டு, தமிழக அரசு சுசீந்திரம், தேரூர் பகுதி குளங்கள், மணக்குடி காயல் உள்ளிட்ட பகுதிகளை பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் இருந்தும் குமரி நீர் நிலைகளுக்கு வரும் பறவைகள், குளங்களின் அருகிலுள்ள வயல்கள், தோட்டங்களில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள், புழுக்கள், லார்வாக்கள், நண்டுகள், நத்தைகள் ஆகியவற்றை உணவாக உண்கின்றன. இதனால், இவை இயற்கை பூச்சிக் கட்டுப்பாட்டுக் கருவியாக செயல்படுகின்றன. பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் குறைகிறது.

விவசாயிகளுக்கு தோழமையாய் இருக்கும் இப்பறவைகளை வேட்டையாடுவது, தீமை விளைவிப்பது, அவற்றின் வாழ்விடங்களை அழிப்பது ஆகியவை, தமிழ்நாடு வனச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பறவைகள் வாழ்கின்ற குளங்கள், நீர் நிலைகள் வனத்துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளன. தேரூர், பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பறவைகளைக் கண்டு மகிழ, உயர்நிலை காட்சிக் கோபுரங்களை கட்டியுள்ளனர். பறவைகள் உணவு உண்ட பின் ஓய்வெடுக்க குளங்களின் கரைகளில் மண் மேடுகளை அமைத்துள்ளனர். குமரி மாவட்டத்துக்கு வரும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டியது, மாவட்ட மக்களின் கடமையும் கூட என்றார்.

SCROLL FOR NEXT