மற்றவை

புதுக்கோட்டை: நாளொன்றுக்கு 40,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யத் திட்டம்; ரூ.4.9 கோடியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன

கே.சுரேஷ்

புதுக்கோட்டையில் ஆவின் நிலையத்தில் ரூ.4.9 கோடியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது நாளொன்றுக்கு 40,000 லிட்டர் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பாளர்கள் அதிகம் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் பால் கொள்முதல் செய்தல், பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின்(ஆவின்) சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட பால் உள்ளூரில் விற்பனை செய்ததைவிட அதிகளவில் பிற மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.4.9 கோடியில் இயந்திரம்…

புதுக்கோட்டையில் தற்போது ரூ.4.9 கோடியில் இயந்திரம் மூலம் மணிக்கு 5,000 லிட்டர் பால் சூடுபடுத்தவும், உடனுக்குடன் குளிரூட்டவும், அறையில் வைத்து பாதுகாத்தல், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தல் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான கலன்கள், வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கு 40,000 லிட்டர் பால் பாதுகாப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை வெற்றிகரம்…

பணிகள் முடிக்கப்பட்டு சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதனால் இந்த நிலையம் முதல்வர் மூலம் விரைவில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து புதுக்கோட்டை ஆவின் பொதுமேலாளர் என்.கிறிஸ்டோபர் கூறியது: “மாவட்டத்தில் 123 சங்கங்கள் உள்ளன. இங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் இயந்திரங்கள் மூலம் தரம் நிர்ணயம் செய்து, விலை நிர்ணயிக்கப்படும். அதன்பிறகு அடுத்தடுத்த நிலைகளுக்கு மாற்றப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், வெண்ணெய், தயிர் அதிகளவில் தயாரிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பால் குளிரூட்டும் வசதி…

கிராமப்புறங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் இங்கு கொண்டுவருவதற்குள் சில நேரங்களில் கெட்டுவிடுவதால் தொலைவுக்கு ஏற்றவாறு 5,000 லிட்டர் கொள்ளளவில் ரூ.30 லட்சத்தில் கீரமங்கலம், கடியாபட்டி, ஒலியமங்கலம், ராஜாளிப்பட்டி ஆகிய இடங்களில் விரைவில் பால் குளிரூட்டும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை நகரில் இதுவரை நாளொன்றுக்கு 10,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. நகரில் 22 இடங்களில் விற்பனை நிலையம் திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, கந்தர்வகோட்டை, மீமிசல், பொன்னமராவதி, புதுப்பட்டி பகுதிகளில் பால், பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் பால் விற்பனை செய்வதற்கு 10 புதிய வழித்தடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதம் ரூ.30,000 வருவாய்…

ஒரு நபர் ஒரு ஏக்கரில் தீவனப் புல் வளர்த்து 10 பசு மாடு பராமரித்தால் மாதம் ரூ.30,000 வருவாய் ஈட்டமுடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வளத்தைக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வெண்மைப்புரட்சி ஏற்படுத்தப்படும். தற்போது மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நிலையம் முழுமைபடுத்தும் பணி முடிவடைந்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT