மற்றவை

ஆட்டோ கட்டண புகார் எண்ணுக்கு தவறான தகவல் தந்த 400 பேர் - அலைக்கழிக்கப்பட்ட அலுவலர்கள்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பான புகார்களை அளிக்க தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, போன் செய்த 400 பேர் தவறான பதிவு எண்களை கொடுத்துள்ளனர். அந்த எண்களில் பெரும்பாலானவை மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்களுடையதாக இருந்ததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ல் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 25, கூடுதலாக கிலோமீட்டருக்கு ரூ. 12 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.

அதிக கட்டணம் வசூலித்தல், மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க 50 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. புதிய கட்டணத்துக்கேற்ப மீட்டர்களை திருத்தியமைக்காமல் ஓடும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலும், 26 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரையில், கடந்த 5 நாட்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக கட்டணம், மீட்டர் பொருத்தாதது உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் அளிக்க 044-26744445, 044-24749001 ஆகிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டன. மக்களும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று மக்கள் கொடுத்த பதிவு எண்ணை ஆய்வு செய்யும் போது, அது வேறு வாகனங்களாக இருக்கிறது. மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியவற்றின் எண்களும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுவரையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளிக்கும் போது, ஆட்டோக்களின் பதிவு எண்களைத் தவறாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறையின் ஆணையரக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மக்களின் நலன் கருதி ஆட்டோக் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடுகள் நடக்காமல் இருக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எனவே, மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் போதுதான் இத்திட்டம் சிறப்பாக இருக்கும். மீட்டர் போட்டு இயங்காத ஆட்டோவில் மக்கள் ஏறாமல் புறக்கணிக்க வேண்டும்.

மேலும், புகார் கொடுக்கும் போது, ஆட்டோக்களின் பதிவு எண்களை சரியாக கொடுக்க வேண்டும். இதுவரையில், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் தவறான எண்களையே அளித்துள்ளனர்.

போக்குவரத்து துறையில் ஆட்கள் பற்றாக்குறையுள்ள நிலையி்ல், இது வீண் அலைச்சல், அதிகாரிகளை அலுப்படையச் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT