மற்றவை

கோவை: ஆள் உயரமே இல்லை; இது யானை அகழியா?

செய்திப்பிரிவு

‘ஆள் உயரம் கூட இல்லை. இதுதான் யானைகளுக்கு வெட்டப்பட்ட அகழி என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அகழியைத் தாண்டி யானைகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும்’ என்று கேட்கின்றனர் தொண்டாமுத்தூர் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள் போளுவாம்பட்டி, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மாதம்பட்டி, ஆலாந்துறை, நாதகவுண்டன்புதூர், கெம்பனூர், குப்பேபாளையம், விராலியூர், தாளியூர், ஓணாபாளையம், நரசீபுரம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

வனப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்கள் இங்கே மிகுதியாக இருப்பதால் மலையிலிருந்து இறங்கும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை பொருட்களை கபளீகரம் செய்கின்றன. எனவே போளுவாம்பட்டி முதல் மருதமலை வரையும், நரசீபுரம், விராலியூர், குப்பேபாளையம், தாளியூர், ஓணாப்பாளையம் வழியாக சுமார் 16 கி.மீ. வரையும், நாதகவுண்டன்புதூர், ஆலாந்துறை, நண்டங்கரை வன எல்லைகளிலும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்பில் அகழி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் கெம்பனூர், அட்டுக்கல், குப்பேபாளையம், நாதகவுண்டன்புதூர் என பல்வேறு பகுதிகளில் பெரிய பாறைகள் குறுக்கிடுகின்றன. பொதுவாக, யானைகள் அகழி என்பது மேலே 3 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழம், அடி ஆழத்தில் 2.5 மீட்டர் அகலம் என கணக்கிட்டு ஆங்கில எழுத்து 'வி' வடிவில் அகழிகள் வெட்டப்பட வேண்டும். ஆனால், இந்த அகழிகள் வெட்டப்பட்ட இடங்களில் எல்லாம் பெரிய பெரிய பாறைகள் குறுக்கிடும் பகுதிகளில் ஏனோதானோ என்றே வெட்டியிருக்கிறார்கள். பல இடங்களில் ஆட்களே இறங்கி ஓடிவிடலாம், அப்படியொரு நேர்த்தி.

இப்படியிருந்தால் யானைகள் வராமல் என்ன செய்யும்? அதேபோல், அகழியிலிருந்து வெட்டியெடுத்த மண்ணை, யானைகள் வரும் வழிக்கு எதிரே போட வேண்டும். ஆனால் இங்கே யானை வரும் வழித்தடத்திலேயே மண்ணை போட்டுள்ளனர். அந்த மண்ணை தள்ளி அகழிக்குள் நிரப்பிவிட்டு யானைகள் சுலபமாக அகழிக்குள் இறங்கி வந்துவிடுகின்றன.

இது குறித்து கேட்டால், யானைகளுக்கு சொர முள்ளுன்னா ரொம்ப பயம். அதனால் இந்த மண் போட்ட ஏரியில் சொர முள்ளுகளை நடப் போகிறோம். அது வளர்ந்து நிற்கும்போது யானைகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர். இவர்கள் சொர முள்ளு போட்டு வளர்த்தற வரை யானைகள் அகழிக்குள் மண்ணைத் தள்ளாமல் வெயிட் பண்ணுமா?’’என்று கேட்கிறார் நாதகவுண்டன்புதூரை சேர்ந்த கோபி. இதற்கு நேரடி விளக்கமும் தந்தார்.

‘இப்படித்தான் பல இடங்களில் அகழி வெட்டப்பட்டுள்ளது. இது சரியான முறையா என்று விவசாயிகள் கேட்டதற்கு இந்த குறியீட்டு அளவுதான் விஞ்ஞான ரீதியாக யானைகளை ஆபத்தில்லாமல் தடுப்பதற்கான கணக்கு என்று முதலில் சொன்னார்கள் வனத்துறையினர். உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு, இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதலை, பாறை வந்துடுச்சு, பொக்லைன் வரணும். அதற்கு மேலிடத்தில் 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கணும்ன்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருக்காங்க!’ என்றனர் இங்குள்ள விவசாயிகள்.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த பகுதியெல்லாம் நிலக்கடலை விளையும் விவசாயத் தோட்டங்களாக இருந்தது. அதற்குப்பிறகுதான் யானைகள் இங்கே கீழே இறங்க ஆரம்பித்தது. அதுமுதலே விவசாயத்தை கைவிட வேண்டியதாகி விட்டது!’’ என்றனர்.

அண்மையில் குப்பேபாளையத்தில் யானை தாக்கி ஒரு பெண் இறக்க, இங்கே காட்டு யானைகளை விரட்ட கும்கி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வந்து இந்த யானை அகழிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது, இங்கிருந்த மக்கள் யானைகளால் ஏற்படும் அச்சங்களை விவரித்திருக்கின்றனர். அதீத ஒளிமிக்க டார்ச் லைட்கள், பட்டாசுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அகழியையும் யானைகள் வராத அளவு சரி செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளனர். இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

SCROLL FOR NEXT