அப்பாடா... அழகிரி பிறந்த நாள் விழா முடிந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடாதீர்கள். அதை மிஞ்சும் வகையில் மதுரையில் அடுத்தடுத்து முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாட அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆளுங்கட்சியாக இருந்தால் அமைச்சர்கள் தொடங்கி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை மு.க.அழகிரிக்கு வரிசையில் நின்று வாழ்த்து சொல்வது வழக்கம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தால், தொண்டர்களும், தென்மண்டல நிர்வாகிகளும் வாழ்த்துச் சொல்வார்கள்.
இந்த ஆண்டு சொந்தக் கட்சியிலேயே, விழாவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மு.க.அழகிரி பிறந்த நாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் மதுரை குலுங்க குலுங்க நடத்தி முடித்துள்ளனர்.
“வழிநடத்தவும், ஒருங்கிணைக்கவும் போதிய ஆள் இல்லாத அழகிரி அணியிலேயே இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றால், நிர்வாகிகள் எல்லாம் நம் பக்கம் இருக்கிறார்கள். நாம் தளபதி பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாட வேண்டும்” என்று ஸ்டாலின் தரப்பு தயாராகி வருகிறது. இதனால், அழகிரி பிறந்த நாள் விளம்பரங்களுக்குப் போட்டியாக ஸ்டாலின் ஆதரவாளர்களும் சுவர் விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இது குறித்து ஸ்டாலின் ஆதரவு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தளபதி ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1-ம் தேதி வருகிறது. அன்று 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்னர், திருச்சி மாநில மாநாடு பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தன் பிறந்த நாளைவிட, இந்த இரு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவதையே ஸ்டாலின் விரும்புவார் என்பதால், அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மாநாடு, உட்கட்சித் தேர்தல் எல்லாம் முடிந்த பின்னர், மார்ச் 1-ம் தேதிக்குப் பதிலாக நான்கைந்து நாட்கள் கழித்தாவது விழாவை சிறப்பாக நடத்துவோம்” என்றார்.
இதற்கிடையே, அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தி.மு.க. தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்ததால், அ.தி.மு.க.வினர் ரசித்தனர். ஆனாலும், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதைவிட சிறப்பாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பினர் கூறுகையில், “இந்தியப் பிரதமராக வாய்ப்புள்ள நேரத்தில் அம்மாவின் பிறந்த நாள் விழா வருகிறது. மதுரை மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அழகிரிக்கே நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள் என்றால், நாங்கள் வழங்க மாட்டோமா?. அரசு ஆஸ்பத்திரி ஆரம்பித்து அனாதை இல்லங்கள் வரை சென்று மக்களுக்கு உதவுவோம். இது தவிர வார்டு தோறும் அன்னதானம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.
மக்களவைத் தொகுதிக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த விழாவை நடத்த தலைமை உத்தரவிட்டுள்ளது. எனவே, அம்மா பிறந்த நாளன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தெப்பக்குளம் சந்திரகுழந்தை திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” என்றார்.