மற்றவை

அறம் பழகு எதிரொலி: தி இந்து வாசகர்களின் உதவியுடன் குத்துச்சண்டை போட்டிக்காக நேபாளம் செல்கிறார் யோகேஸ்வரி

க.சே.ரமணி பிரபா தேவி

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான அரசுப் பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் புதிய தொடர் 'அறம் பழகு'.

இதில் அரசுப் பள்ளி மாணவி யோகேஸ்வரி சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்ளத் தேவைப்பட்ட ரூ.32,500 இல்லாததால், நேபாளம் செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பது குறித்து செய்தி வெளியானது.

இதைப் படித்த 'தி இந்து' வாசகர்கள், போட்டிக்குச் செல்லத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியுள்ளனர்.

ஊர்

பெயர்

தொகை (ரூபாயில்)

பெங்களூரு

விஜய் அவரின் நண்பர்கள்

32,500

கோயம்புத்தூர்

பாண்டியன்

5,000

அமெரிக்கா

சிவா

5000

சென்னை

நாட்ராயன்

3000

பெங்களூரு

பிரேம்

1000

தாம்பரத்தில் இருந்த பேசிய விஜய் என்பவர் பாக்ஸிங் உபகரணங்களை வாங்கித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.

யோகேஸ்வரியின் அம்மா பேசும்போது, ''எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க. எம்பொண்ணு யோகி அடுத்த கட்டத்துக்கு போவாளோ மாட்டாளோன்னு பயந்துட்டே இருந்தேன். இன்னிக்கு இந்து வாசகர்கள்தான் உதவி பண்ணி என் பொண்ண நேபாளத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க.

கங்கை அமரன் மற்றும் விஷால் சாருங்க ஆபிஸ்ல இருந்து நேத்து (வியாழக்கிழமை) கூப்டுருந்தாங்க. பொய் சொல்லிப் பணம் வாங்கக்கூடாதுல்ல, அதனால எங்களுக்குப் போதுமான பணம் வந்துடுச்சு. அடுத்து கனடாவுல நடக்கப்போற சர்வதேசப் போட்டிக்குத் தேவைப்படும்போது கேட்கறோம்னு சொல்லிட்டேன்'' என்கிறார் யோகேஸ்வரியின் தாய்.

இதுகுறித்துப் பேசிய மாணவி யோகேஸ்வரி, ''ரொம்ப தேங்க்ஸ்கா. இவ்வளவு சீக்கிரமா பணம் கலெக்ட் ஆகும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

போட்டி ஜூன் 15 தான். இன்னும் ஒன்றரை மாசம் இருக்கு. அதுக்குள்ள நல்லா பிராக்டிஸ் பண்ணிப்பேன். கண்டிப்பா கோல்ட் அடிச்சுட்டு வருவேன்கா'' என்பவரின் குரலில் உறுதி தெறிக்கிறது.

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

SCROLL FOR NEXT