திண்டுக்கல் நகராட்சி சார்பில், பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிக்க, குடிக்க, கழிப்பிடம் செல்ல, செல்போன் சார்ஜ் செய்ய பாதயாத்திரை சாலையில் வசதி செய்யப்பட்டுள்ளதாக பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இடத்திலும் அந்த வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பழனி தைப்பூசத் தேர் திருவிழா, ஜன.17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனி கோயிலுக்கு தினசரி வருகின்றனர்.
கடந்த காலங்களில் பழனி கோயில் தேவஸ்தானம், உள்ளாட்சி அமைப்புகள், சாலையோரங்களில் தங்குமிடம், அன்னதானம், குளிக்க, கழிப்பிட செல்ல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு விழா துவங்கிய ஆரம்பத்தில் இருந்து கோயில் தேவஸ்தானம், உள்ளாட்சி அமைப்புகள் பாதயாத்திரை பக்தர்களுக்கு போதிய தங்குமிடம், குடிநீர், கழிப்பிட மற்றும் குளியல் அறை வசதிகளை செய்யவில்லை என்ற புகார் உள்ளது.
பக்தர்களால் சாலைகளில் போடப்பட்ட பாலிதீன் கவர்கள், அன்னதான இலைத்தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் பல நாள்களாக அப்புறப்படுத்தாமல் கிடப்பதால் கடும் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குளியல் அறை வசதிகளும் இல்லாததால், குளிக்காமலேயே பக்தர்கள் பலர் பாதயாத்திரை செல்கின்றனர். இதனால், காய்ச்சல் உள்ளிட்ட மர்ம நோயால் பாதிக்கப்பட்டு "போதுமடா சாமி" என வெறுத்துப்போய் ஊர் திரும்பும் நிலை உள்ளது.
பக்தர்கள் நலனில் அலட்சியம்
தினசரி சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் வரும் தைப்பூசத் விழாவில் போதிய ஏற்பாடுகள் செய்யாமலேயே பணத்தை மிச்சப்படுத்தி, விழாவை முடித்துவிடலாம் என பழனி தேவஸ்தானம், உள்ளாட்சி அமைப்புகள் நினைப்பதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் நகராட்சி சார்பில் பாதயாத்திரை சாலைகளில், பக்தர்களுக்கு செல்போன் சார்ஜ் வசதி, குளிக்குமிடம், தங்கும் வசதி, குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதானமாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதிகள் எந்த இடத்திலும் செய்து கொடுக்கப்படவில்லை.
இந்த பேனரை பார்க்கும் பாதயாத்திரை பக்தர்கள், அந்த வசதிகள் எங்கே உள்ளன என தேடித்தேடி அலுத்துப்போய் அதிருப்தியுடனும், குழப்பத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
"போகி பண்டிகை அன்று, அந்த வசதிகள் செய்து கொடுத்திருந்தோம். அதன்பின், அவற்றை தொடர்ந்து செய்ய முடியவில்லை.'' என முடித்துக் கொண்டார்.