மற்றவை

கோவை: நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் மழைநீர் வடிகால்கள்

கா.சு.வேலாயுதன்

மழை நீர் வடிகால் திட்ட வேலைகள் முடிந்தும் முடியாமலும் கிடக்கும் நிலையில் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிந்துவிட்டதால் தவிக்கும் நிலையில் உள்ளது கோவை மாநகராட்சி.

இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பில் கிடைத்துவிடும். எனவே அரைகுறையாக நிற்கும் வேலைகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர்களோ, அதை எழுத்துப்பூர்வமாக கேட்கின்றனர் இதனால், பணி நடப்பது கேள்விக்குறியா கியுள்ளது என்கின்றனர் கவுன்சிலர்கள் சிலர். அவர்கள் கூறியது:

கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகரப்புற புனரமைப்புத் திட்டத்தில் மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் முதல் கட்டத்தில், பாதாள சாக்கடைப் பணிகள் 377 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், 334 கி.மீ., நீளத்திற்கு பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி நடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஓரமாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 731 கி.மீ., நீளத்திற்கு பணிகள் நடந்துவந்தன. அந்த பணிகள்தான் தற்போது முடிந்தும் முடியாமலும் உள்ளது.

ரூ.490 கோடி திட்டம்

எனவே, இந்த விடுபட்ட பகுதிகளுக்கும், மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சியின் 40 வார்டுகளுக்கும் சேர்த்து 1482 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க 490 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்துள்ளது மாநகராட்சி. அதில், சுமார் ரூ.150 கோடி, பழைய 60 வார்டுகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடைய தேவைப்படுகிறது.

புதிதாக போடப்பட்ட திட்டவரைவு மத்திய அரசு (மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை) ஒப்புதலுக்கு அனுப்பி 10 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை அது கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. ஆனால், இப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் மழைநீர் வடிகால் வசதி என்பது முழுமையடையாமல் இருக்கிறது.

பாதாள சாக்கடை பணிகள் முழுமையடையவில்லை. பணிகள் முடிந்த இடத்தில் சாலை போடப்படவில்லை. மழைநீர் சேகரிப்பு, பாதாளச்சாக்கடை இணைப்புப் பணிகள் நிறைவு பெறாததால் மாநகரில் சாக்கடை கழிவு நீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் பல இடங்களில் பாதியில் நிற்பதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது என்றனர்.

எந்தப் பணியும் தடைபெறவில்லை

இது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் சிவராசு கூறுகையில், "பாதாளச்சாக்கடை பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அதேபோல மழைநீர் வடிகால் வசதியும் பழைய 60 வார்டுகளில் முழுமையடையும் தருவாயில் உள்ளது. அதில் சில வார்டுகளில் சில இடங்களில் மட்டும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது. அதற்கும் விரிவுபடுத்தப்பட்ட மீதி 40 வார்டுகளுக்கு மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை வசதிகளுக்கு திட்டம் தயாரித்து மத்திய அரசு பரிந்துரைக்கு அனுப்பியுள்ளோம். இதனால் எந்த பணியும் தடைபெறவில்லை, சீராகவே நடந்து வருகிறது'' என்றார்.

SCROLL FOR NEXT