போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக 22-ம் தேதி ஆஜராகும்படி அரசுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொ.மு.ச.வுக்கு தொழிலாளர் நல ஆணையர் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.
போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் எனக் கோரி திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை, மூன்று கட்டப் போராட்டங்களை நடத்தியது. அதற்கு பலனில்லை என்பதால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜனவரி 1-ம் தேதி அரசுக்கு நோட்டீஸ் கொடுத்தது.
இதையடுத்து அடுத்த வாரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த தொ.மு.ச. பேரவை தீர்மானித்திருந்தது. இந்நிலையில், போராட்டம் எதிலும் ஈடுபட வேண்டாம் என்றும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனவரி 22-ல் நேரில் ஆஜராகும்படியும் மாநில தொழிலாளர் நல ஆணையர், தொ.மு.ச.வுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:
ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச. மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், அதை மீறி அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களே கொடி பிடிக்கின்றன. பேச்சுவார்த்தையை ஒத்திப் போட்டால், வேறு
வழியின்றி எல்லோரையும் அழைக்கச் சொல்லி தொ.மு.ச.வினர் வழிக்கு வந்துவிடுவார்கள் என கம்யூனிஸ்ட் காரர்களே ஆளும் கட்சிக்கு ஐடியா கொடுக்கிறார்கள். எனவே, தீர்வு சொல்லும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு அனுப்ப மாட்டார்கள். தொழிலாளர் நல இணை ஆணையர், போக்குவரத்துக் கழகங்களின் பொதுமேலாளர் (ஹெச்.ஆர்.) இவர்களைத்தான் அனுப்பி வைப்பார்கள்.
ஆனால், இவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் ஏற்கமாட்டோம். எட்டு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் தொழிலாளர் நல ஆணையரும் வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வோம். பேச்சு வார்த்தை முறையாக நடந்தால், ஏற்கெனவே திமுக ஆட்சியில் போடப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உள்ள 23 ஷரத்துக்களையும் அமல்படுத்துவதுடன் 40 சதவீத ஊதிய உயர்வையும் அமல்படுத்த வேண்டும் என்று கேட்போம்.
ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துக்களை அமல்படுத்தாதை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் நாங்கள் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படும் பஞ்சப் படியையும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்க மறுக்கின்றனர். தொ.மு.ச.வில் உள்ள தொழிலாளர்களுக்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. அனைத்துக்கட்சித் தோழர்களுக்காகவும்தான் நியாயம் கேட்கிறோம். ஆனால், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத அதிகாரிகள், ஆங்காங்கே தொ.மு.ச. தொழிற்சங்கத்தை உடைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.