மற்றவை

இருட்டடிப்பு செய்யப்படுகிறதா புதுச்சேரி விடுதலை நாள்?

செய்திப்பிரிவு

புதுச்சேரியின் விடுதலை நாளான நவம்பர் முதல் நாளை ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்வதாகவும், இதுதொடர்பான மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தக்கோரியும் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பிரெஞ்ச் இந்திய மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

தமிழகத்தின் அருகேயுள்ள புதுச்சேரியை ஆண்டவர்கள் பிரெஞ்சுகாரர்கள். இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். அதையடுத்து சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், பிரெஞ்சுகாரர்கள் ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரி மட்டும் இந்தியாவுடன் இணையவில்லை.

சில ஆண்டுகளில் பிரெஞ்சு கவுன்சிலர்களுக்கும், பிரெஞ்ச் ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்தது.

புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்கலாமா அல்லது பிரெஞ்சு ஆட்சியில் தொடரலாமா என கீழுரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 178 முனிசிபல் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவுடன் இணைய 170 பேர் வாக்களித்தனர். இத் தீர்ப்பு அடிப்படையில் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க பிரெஞ்சு அரசு சம்மதித்தது. அதன்படி 1954-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதனால் 1954-ம் ஆண்டு நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள். இந்நாள் புதுச்சேரியில் கொண்டாடப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக பிரெஞ்ச் இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தின் தலைவர் சிவராஜ் கூறுகையில், "புதுச்சேரியில் 280 ஆண்டு கால பிரெஞ்சு ஆட்சி 1954 அக்டோபர் 31-ல் முடிவுக்கு வந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இருந்து பிரெஞ்சுகாரர்கள் வெளியேறினர். அதனால், 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள். அன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசின் அறிவிக்கை உள்ளது. அரசிதழிலும் 1954-ல் வெளியிட்டனர். ஆனால், புதுச்சேரி ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

அப்போதைய பாரத பிரதமராக இருந்த நேரு தலைமையில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு - இந்திய புதுச்சேரி விடுதலை ஒப்பந்தம் மதிக்கப்படாமல் உள்ளது. புதுச்சேரி விடுதலை நாளை அரசு கொண்டாட வேண்டும். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

சோனியாவிடமும் மனு தந்தோம். அரசு விடுதலை நாள் தொடர்பாக உத்தரவு வெளியிடாததால் புதுச்சேரி அரசை கண்டித்து கடற்கரை காந்தி சிலை முன்பு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT