சென்னை மாநகரின் பல தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது தினசரிக் காட்சியாகி வருகின்றன. குப்பை களை தினமும் அகற்றாததால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக் குள்ளாகின்றனர்.
சென்னையில் தினமும் இரண்டு முறை குப்பைகளை அகற்ற வேண்டும் என்று விதிகள் இருந்தபோதிலும், காலையில் மட்டுமே பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதனால் நாள் முழுவதும் சேரும் குப்பைகள் அங்கேயே கிடந்து துர்நாற்றத்தையும் கிருமிகளையும் பரப்புகின்றன.
நங்கநல்லூரில் வசிக்கும் ப்ரியா என்பவர் இதுபற்றிக் கூறுகையில், “குப்பைத் தொட்டிகள் எப்போதும் நிரம்பி வழிகின்றன. தினமும் காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதும், நாங்கள் அலுவலகம் செல்லும்போதும் இதை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது,” என்றார்.
சில இடங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை ஒரே இடத்தில் வைத்து தொகுப்பு குப்பைத் தொட்டி மையங்கள் அமைக்கப்
பட்டிருக்கின்றன. அங்கிருந்து குப்பைகள், குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. ஆனால் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் இந்த மையங் களுக்கு வெளியிலேயே வைக்கப் படுகின்றன. நிரம்பி வழியும் பல குப்பைத் தொட்டிகள் ஒரே இடத்தில் இருப்பது அப்பகுதிவாசிகளுக்கு இடையூறாக இருக்கிறது. இவற்றால் வீடுகளுக்குள்ளே துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
அடையாறு எல்.பி.சாலையில் மளிகைக் கடை வைத்திருக்கும் பிரகாஷ் என்பவர் இதுபற்றிக் கூறுகையில் “எனது கடை வாசலில் இருக்கும் தொகுப்பு குப்பைத் தொட்டி மையத்திலிருந்து குப்பைகள் தினமும் அகற்றப்படுவது இல்லை. இதிலிருந்து வரும் துர்நாற்றம் இந்த சாலையில் நடப்பவர்களுக்கும் கடைக்கு வருபவர்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது,” என்றார்.
சென்னையில் தினமும் 4900 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப் படுகின்றன. ஆனால் இந்த குப்பை வளாகங்களின் கொள்ளளவு முடியும் தருவாயில் இருப்பதாலும், அப்பகுதிவாசிகளுக்கு சுகாதார கேடுகள் ஏற்படுவதாலும் சென்னை மாநகராட்சி வேறு முறைகளை கண்டிப்பாக கையாள வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.
குப்பைகளை அகற்றுவதில் பல தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. குப்பைகளை வீடுகளிலிருந்து சேகரிக்கும் போதே தரம் பிரிக்க வேண்டும் என்பதே மாநகராட்சிக்கு இவர்களின் முக்கிய ஆலோசனையாக இருக்கிறது. எக்ஸ்நோரா கிரீன் பம்மல் அமைப்பின் மேலாளர் மாரியம்மாள் இதுபற்றிக் கூறுகையில், “ குப்பையை ஒரு இடத்திலிருந்து அள்ளி வேறு இடங்களில் கொட்டுவது நாளடைவில் உதவாது. நாங்கள் மக்கும் குப்பையை 3 விதமாகவும் மக்காத குப்பையை 27 விதமாகவும் பிரிக்கிறோம். இதனால் குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பப்படும். குப்பையின் அளவையும் கணிசமாக குறைக்க முடியும்,” என்றார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: புளியந்தோப்பில் அமைத்
திருப்பதுபோல அனைத்து மண்டலங்களிலும் குப்பை
களிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மூன்று மண்டலங்களில் மண்புழு உரமாக்கல் திட்டம் அமலில் உள்ளது. வீடுகளில் குப்பையை தரம் பிரிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.