“கண்ணுல மின்னல் அடிச்சாப்புல இருந்துச்சும்மா.. பார்வை நரம்பு வந்துருச்சான்னு பாரும்மா..’’ - இப்படித் தன்னிடம் அவ்வப்போது ஓடிவந்து கேட்கும் மகன் ஜெய சூர்யாவுக்கு பதில் சொல்லத் தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார் ரேவதி.
ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வானதிரையான்பட்டினத்தைச் சேர்ந்த ரேவதி - வேல்முருகன் தம்பதிக்கு மூன்று மகன்கள். அதில் மூத்தவன் ஜெயசூர்யா. கட்டிட வேலைக்குப் போய் கஞ்சிகுடிக்கும் இந்தக் குடும்பம் இப்போது நிம்மதியையும் நித்திரையையும் தொலைத்துவிட்டு நிற்கிறது.
கண்ணைப் பறித்த சண்டை
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஜெயசூர்யா ஐந்தாம் வகுப்பு படித்தான். அப்போது, ஒரு நாள் இரவு தெருச் சண்டையை வேடிக்கை பார்க்கப் போனவனை யாரோ ஒருவர் பிடித்துத் தள்ள, தடுமாறிப் போய் விழுந்தான். விழுந்த இடத்தில் மாடுகளை கட்டுவதற்காக தரையில் நட்டு வைத்திருந்த மரக்கம்பு இருந்ததால் ஜெயசூர்யாவின் வலது கண்ணில் கம்பு பாய்ந்து கருவிழி முற்றாக கலங்கிப் போனது.
சக மாணவர்கள் கிண்டல்
அதன் பிறகு எதிர்கொண்ட துயரங்களை ரேவதியின் வலி தோய்ந்த வார்த்தைகளே சொல்லட் டும். ’’புதுச்சேரி ஆஸ்பத்திரியில மூணு ஆபரேஷன் பண்ணுனாங்க. அப்படியும் பார்வை வரல. இதுக்கே எங்களுக்கு மூணு லட்சத்துக்கு மேல செலவாகிருச்சு. ஒரு கண் பார்வையோட வழக்கம் போல ஸ்கூலுக்குப் போனான். ஆனா, கூடப் படிக்கிற பசங்க அவன நிம்மதியா இருக்க விடல. அவனைக் கிண்டல் பண்ணிருக்காங்க. விளையாடப் போற இடங்கள்லயும் கிண்டல் பண்ணிருக்காங்க.
ரப்பர் கண்
கண் விகாரமா தெரியாம இருக்கதுக்காக ரப்பர் கண் வாங்கி மாட்டிவிட்டேன். அப்படியும் பசங்க இவன கிண்டல் பண்றத நிறுத்தல. இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன் கிணற்றில் விழுந்து தற்கொலை பண்ணிக்கப் போயிருக்கான். ’ஏந்தம்பி இப்புடிச் செஞ்சே?’ன்னு கேட்டதுக்கு, ‘முடிஞ்சா எனக்கு பார்வை வரவையி.. இல்லாட்டி நீயே என்னைய கொன்னுரும்மா’ன்னு அவன் சொன்னான்.
போன மாசம் திடீர்னு ஒரு நாளு ஜெயசூர்யா காணாமப் போயிட்டான். மூணு நாள் கழுச்சு மதுரையிலருந்து இவனை கூட்டிட்டு வந்தோம். போலீஸ் விசாரிச்சப்ப, ‘மதுரை அரவிந்த் ஆஸ்பத்திரியில நிறையப் பேருக்கு ஆபரேஷன் செஞ்சு பார்வை வரவைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதுக்காகத்தான் போனேன் என்றான்.
எம் புள்ள நல்லா படிக்கணும்
பணம் கட்டிப் படிக்க வைக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லீங் கய்யா.. எனக்கு பணம் காசு எதுவுமே தேவையில்லை. எம் புள்ள நல்லா படிக்கணும். பார்வை இல்லாட்டிப் போனாலும் படிப்பு அவனுக்கு சோறு போடும். அதுக்கு யாராச்சும் உதவி செஞ்சாங்கன்னா போதும்’’ நா தழுதழுக்க முடித்தார் ரேவதி.
ஜெயசூர்யாவுக்கு உங்களால் உதவ முடியும் என்றால் 9789008341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.