திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற் பயிர்களுக்கு கொள்முதல் நிலையம் இல்லாமல் தவிக்கும் நிலையில், தாராபுரத்தில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியிருப்பது விவசாயிகளையும், விவசாயத்தை நம்பியுள்ள 15 ஆயிரம் குடும்பங்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமராவதி பாசனம்
அமராவதி பாசன சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.விஸ்வநாதன் கூறியது: அமராவதி பாசனத்தில் 52 ஆயிரத்து 560 ஏக்கர் உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 27 ஆயிரம் ஏக்கர் உள்ளது. உடுமலைப்பேட்டை தொடங்கி கரூர் மாவட்ட மாயனூர் வரை 192 கி.மீ., பாசனத்திற்கு அமராவதி தண்ணீர் செல்கிறது. தற்போது, அப்பகுதியில் 15 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் இல்லை. குடிநீர் மட்டும் தான் கிடைக்கிறது.
உடுமலை வட்டம் கணியூர் காரத்தொழுவு மடத்துகுளம் பகுதியில் ஒருபோக சாகுபடி எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டுப் பகுதியில் மானாவாரி பயிர்களான பீட்ரூட், சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
2500 ஏக்கர்
தாராபுரம் வட்டத்தில் அலங்கியம் தடுப்பணை பாசனம், தளவாய்பட்டினம் தடுப்பணை பாசனம், தாராபுரம் ராஜவாய்க்கால் பாசனம், கொளிஞ்சிவாடி ராஜவாய்க்கால் பாசனம்,வீராச்சிமங்கலம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்றுப் பாசனம் இல்லாத 2500 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளன.
இதனால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க உள்ளனர். தாராபுரம் சீத்தக்காடு பாசன தடுப்பணை பகுதியிலும், ராஜவாய்க்கால் பகுதியிலும் பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன.
அமராவதி அணையில் 6 அடி தண்ணீர் தான் உள்ளது. அந்த தண்ணீர் நிச்சயம் தாராபுரம் பகுதிக்கு வந்துசேராது. பயிர்களின் உயிரை காக்க வேண்டிய நிலையை கடந்து, பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வதாரத்தை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களை அனுப்பி மானியம் கொடுப்பதற்கான நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதலீடு செய்துள்ளோம். 3 ஆயிரம் விவசாயிகள் நெற்பயிரை நம்பி விதைத்து, கடைசிக்கட்ட தண்ணீரின்றி நஷ்மடைந்துள்ளோம்.
அறிகுறி இல்லை
இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த விவசாயிகள் அனைவருக்கும், உடனடியாக ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் விவசாயக் குடும்பங்களுக்கு ஓர் ஆண்டிற்கான அரிசி வழங்கி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
15 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வதாரத்தை காப்பாற்றக் கோரி தாராபுரம் கோட்டாட்சியரிடம் தண்ணீர் திறக்க மனு அளித்தோம். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மனு அளித்தோம். ஆனால், அமராவதி தண்ணீர் தாராபுரம் பகுதிக்கு எட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே, கிராமநிர்வாக அலுவலர்கள் மூலமாக உடனடியாக கணக் கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.
கடந்தாண்டும் இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், இந்தாண்டு நெற்பயிருக்கு இறுதிக்கட்ட தண்ணீரின்றி கருகிய பயிர்களைக் கண்டு மனம்நொந்து போயுள்ளன விவசாயக்குடும்பங்கள்.