சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த விடுதிகளால் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, கழுதைப்புலி, மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தேசிய புலிகள் ஆணையத்தின் விதிமுறைகளின் படி சத்தியமங்கலம் வனப்பகுதி, கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி முதல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் இருந்து இப்பகுதி வனச்சூழல், விலங்குகளின் வாழ்விடத்துக்கு ஏற்றவாறு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் நடமாட்டம்
ஆனால், இந்தச் சூழலை குலைக்கும் வகையில் வனப்பகுதிகளில் அனுமதி பெறாத கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தாளவாடி, ஆசனூர், தலமலை, நெய்தாள புரம், கேர்மாளம், ஆசனூர் - மைசூர் செல்லும் சாலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகளில் பிறந்தநாள், திருமண நாள், நிறுவனங்களின் கூட்டங்கள், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டம் என வெளியூர்வாசிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
அதிரவைக்கும் இசை, வாணவேடிக்கைகள், வாகனங்களின் இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுதல் என வனத்தின் சூழலை கெடுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறத்துவங்கி விட்டன. நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்த விடுதிகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி இருக்க முடியும் என்பதால் இந்த வாடகையை கொடுப்பதற்கு பலரும் தயங்குவதில்லை. தற்போது, இணையதளங்கள், விளம்பரங்கள் வாயிலாக கேளிக்கை விடுதிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
கவலைப்படாத காவல்துறை
மிகப்பெரிய சுற்றுச்சுவர்களுடன் இருக்கும் இந்த விடுதிகளில் பல்வேறு வகையான சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்வதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். சுமார் 200 கி.மீ. தூரம் வரை நீண்டுள்ள மிகப்பெரிய வனப்பரப்பில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் என மூன்று காவல்நிலையங்கள் மட்டுமே உள்ளன. இவற்றிலும், போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இல்லாததாலும், சட்டவிரோத சம்பவங்களை தடுக்க அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை.
இதுகுறித்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபைத் தலைவர் தளபதி கூறியதாவது:
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பழங்குடியினருக்கு சொந்தமான நிலத்தை, சில லட்சங்களை கொடுத்து வாங்கி இங்கு சொகுசு விடுதிகளை அமைத்துள்ளனர். இவர்கள் வந்து தங்கும் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் இவை வெளியாட்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. குடித்து விட்டு கொட்டமடித்தல், விபசாரம் என பல சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
குழப்பமடையும் விலங்குகள்
சமீபத்தில் விடுதி ஒன்றில் குடிபோதையில் இருந்த தொழிலதிபர் போலீஸ்காரரையே மது பாட்டிலால் தாக்கும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது. வனவிலங்குகளின் வழித்தடங்களை மறித்து, விடுதிகள் எழுப்பியுள்ளதால் அவை குழப்பமடைந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய விளை நிலங்களில் நுழைவது அதிகரித்து வருகின்றன. மனிதர்களின் சேட்டைகளால், வனவிலங்குகள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் குடியிருப்புகள் கட்ட நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டு சொகுசு மாளிகைகளாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடின், குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் வனவிலங்குகள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவது அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுத்தவிர, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் ஆசனூர் - கொள்ளேகால் சாலையில் இரவு நேரங்களில் கார் மற்றும் பைக் பந்தயங்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பந்தயங்களில் ஈடுபடுவோர் அதிக வெளிச்சம் வாய்ந்த விளக்குகளை பயன்படுத்துவதும், ஹாரன்களை அலற விடுவதும் வன விலங்குகளை பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆய்வு நடத்துமா அரசு?
கடந்த 1980க்கு பின், வனப்பகுதியில் நிலப்பரிமாற்றம் செய்யப்பட்ட விபரங்களை அரசு ஆய்வு செய்தால் விதிமுறை மீறல்கள் தெரிவரும். அத்தகைய நில விற்பனையை அரசு ரத்து செய்து, வனத்துறையினரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி இயங்கும் கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும். வனப்பகுதிகளில் புதிய நிலப்பரிவர்த்தனைகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதன் வாயிலாகவே வனத்தையும், வன விலங்குகளையும் காப்பாற்ற முடியும். கூடவே, வன விலங்குகள் விளை நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதையும் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.