மற்றவை

குறைந்த கட்டணத்தில் நிறைவான படிப்பு

ஜெயபிரகாஷ் காந்தி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., வெட்னரி இவற்றின் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது பாரா மெடிக்கல் படிப்புகள். பலரும் பாரா மெடிக்கலை இரண்டாம் தர படிப்பாக எண்ணுகின்றனர். அது தவறானது. உண்மையில், மருத்துவப் படிப்புக்கு இணையானது இது. இதிலும் சரியான பிரிவுகளையும் மேற்படிப்புகளையும் தேர்வு செய்து படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு நிச்சயம்.

தமிழகத்தில் பி.எஸ்சி., நர்சிங் படிக்க பெண்களுக்கு 150 கல்லூரிகளும், ஆண்களுக்கு 74 கல்லூரிகளும் உள்ளன. இதில் அரசு கல்லூரி நான்கு மட்டுமே. இது, மொத்தம் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு. இதில் மேற்படிப்பாக நியூரோ சர்ஜரி, போஸ்ட் ஆபரேட்டிவ் நர்ஸிங், கார்டியாக் நர்ஸிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன.

மருத்துவத் துறையில் சாதிக்க விரும்புபவர்களும், சேவை மனப்பான்மை கொண்டவர்களும் இவற்றைத் தேர்வு செய்யலாம். சொல்லப்போனால் மருத்துவம் முடித்தவர்களைவிட இவர்களுக்கே உலகளவில் அதிக டிமாண்ட் நிலவுகிறது.

இவை தவிர பாரா மெடிக்கலில் பி.பார்ம், பேச்சுலர் ஆஃப் பிசியோதெரபி, பேச்சுலர் ஆஃப் ஸ்பீச் ஆடியாலஜி அண்ட் லேங்குவேஜ் பெத்தாலஜி, பி.எஸ்சி. இன் ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோதெரபி, பேச்சுலர் ஆஃப் ஆக்குபேஷன் தெரபி உள்ளிட்ட பாடப் பிரிவுகள் அதிக பலன் தருபவை. இவை பொறியியல் பாடப்பிரிவுக்கு இணையானவை.

மேற்கண்ட படிப்புகளுக்கு கட்டணமும் குறைவு. அரசு கல்லூரியில் ஆண்டுக் கல்விக் கட்டணம் 1,200 மட்டுமே. இதுவே தனியார் கல்லூரிகளில் ரூ.28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும். இவற்றிலும் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புவரை படித்து டாக்டர் பட்டம் பெறலாம். வீட்டில் இருந்தபடி சுய தொழிலும் செய்யலாம்.

இந்தப் பாடப் பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு பொறுமை அவசியம். ஏனெனில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிந்த பிறகே பாரா மெடிக்கலுக்கு கவுன்சலிங் தொடங்கும்.

எனவே, அவசரப்பட்டு வேறு பட்டப் படிப்புகளை தேர்வு செய்த பின்பு, இதைப் படிக்க விரும்பினால் முதலில் சேர்ந்த கல்லூரிக்கு செலுத்திய கட்டணம் வீணாகிவிடும். நடப்பாண்டில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படித்தான் பணத்தை வீணடித்தார்கள். மருத்துவத் துறை அதீத வளர்ச்சி கண்டு வருவதால், பாரா மெடிக்கல் படித்தவர்கள் நிச்சயமாக யாருக்கும் பாரமாக இருக்கும் நிலை வராது. நம்பிப் படிக்கலாம்.

SCROLL FOR NEXT