மற்றவை

பாஜகவின் உத்தி: அகிலேஷ் யாதவ் நேர்காணல்

செய்திப்பிரிவு

முசாபர்நகர் கலவரங்களுக்கு பாரதிய ஜனதாவே காரணம் என்கிறார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ். பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள ராஜா பைய்யாவை மீண்டும் மாநில அமைச்சராக்கியது நியாயமே என்றும் கூறுகிறார். லக்னௌ நகரில் ‘தி இந்து’ நிருபர் ஒமர் ரஷீதுக்கு அவர் அளித்த பேட்டி:

முசாபர் நகர் கலவரங்களுக்கு யாரைக் குற்றம்சாட்டுவீர்கள் அல்லது யார் காரணம் என்று கூறுகிறீர்கள்?

இதற்கு முன்னாலும் பலமுறை கூறிவிட்டேன். இந்த விவகாரம் குறித்து ஓரளவுக்கு ஞானம் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியும், இது இந்து – முஸ்லிம் மோதல் அல்ல. இது வேறு விவகாரம். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தைத் தாக்கியது. எல்லோருக்கும் இது தெரியும். இதன் பின்னணியில் இருப்பது பாரதிய ஜனதா. வகுப்புவாத சக்திகளைத் தடுப்பதுதான் எங்களுடைய கொள்கையாக இருந்தது, இருக்கிறது. எங்களுடைய கட்சி மதச்சார்பற்றது, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

அப்படியொரு சம்பவம் நடந்த பிறகு பாரதிய ஜனதா மீது பழியைப் போடுவதால் நீங்கள் தப்பித்துவிட முடியுமா? உங்களுடைய பெயருக்கு அது களங்கமாக இருக்காதா? இது உங்களுடைய அரசு, சட்டம்-ஒழுங்குக்கு நீங்கள் அல்லவா பொறுப்பு?

நான் ஏன் அவர்களைக் குற்றம்சாட்ட வேண்டும். யார் காரணம் என்று மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சில சம்பவங்களில் அவர்களுக்கு (பாஜக) தொடர்பிருக்கிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இது பாரதிய ஜனதாவின் வேலை. இது ஜனநாயக நாடு, நாட்டு மக்களிடையே ஒற்றுமையைக் காக்க வேண்டிய கடமை அவர்களுக்கும் இருக்கிறது.

ஜான்சியில் ஒரு கோயிலை மையமாக வைத்துப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். பல ஆண்டுகளாக இரு சமூகங்களும் அங்கே ஒற்றுமையாக வாழ்ந்துவந்தன. நீங்கள் (பாஜக) போய் அங்கே வகுப்புவாதத் தீயை மூட்டுகிறீர்கள். ஏன் இந்தப் பிளவை ஏற்படுத்துகிறீர்கள்? தேவையே இல்லை.

இதே போல தலைநகர் லக்னௌவிலும் பசுவின் மாமிசத்தை எங்கேயோ வீசிப் பதற்றத்தைத் தூண்டுகிறார்கள். மதகுருக்கள் பூஜைகளைச் செய்வார்கள், பண்பாட்டின்படி நடப்பார்கள். ஆனால் சிலர் அந்தப் பாரம்பரியங்களையே உடைக்கிறார்கள். விசுவ இந்து பரிஷத்தும் பாஜகவும் ஒரே அணியில் இருக்கின்றனர். வளர்ச்சித் திட்டங்களைச் சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, வகுப்புரீதியாக மக்களை அணிதிரள வைக்கிறார்கள்.

உங்களுடைய கட்சி முஸ்லிம்களையே பெரிதும் நம்பியிருக்கிறது. நீங்கள் அவர்களை முன்னேற்றுவதாக வாக்களித்தீர்கள். உங்களுடைய அரசின் செயல்பாட்டால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாதுகாப்பற்று இருப்பதாக ஏன் உணர்கிறார்கள்?

உண்மைதான். அரசிடமிருந்து அவர்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர். ஏராளமானவர்கள் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். இந்து, முஸ்லிம் இருதரப்பாருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இரு தரப்பாருக்குமே ஒன்று போலத்தான் உதவிகளைச் செய்கிறோம். நாங்கள் சரியான நடவடிக்கைகளைத்தான் எடுத்துவருகிறோம் என்று இந்துக்களும் முஸ்லிம்களும் கருதுகிறார்கள்.

அப்படியும் ஏன் மோதல்கள் தொடர்கின்றன?

இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. இது ஜனநாயக நாடு. சாதாரண மோதல்களுக்குக்கூட மதச்சாயம் பூசப்படுகிறது. ஒரு அரசாங்கம் எவ்வளவு செய்ய முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்.

அதிகாரிகள் உங்களுடைய காலைவாரிவிட்டார்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. அதிகாரிகள் அப்படி நடந்துகொள்வதாக இருந்தால் எங்களால் எப்படித் திட்டங்களை அமல் செய்திருக்க முடியும்? மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினோம், திருமண மாகாத பெண்களுக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவிகளைச் செய்கிறோம், வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகைகளை வழங்கிவருகிறோம்.

உங்களுடைய அரசின் பல முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. சட்டரீதியாக பல தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேர்கிறது. உத்தரப் பிரதேசத் தேர்வாணையத்தில் இடஒதுக்கீடு தொடர்பானது அதில் ஒன்று…

இது ஜனநாயக நாடு. தங்களுடைய கருத்துகளைச் சொல்லவும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

மிகவும் அதிருப்தி அடைந்துள்ள முஸ்லிம்களின் மனங்களை எப்படி உங்கள் பக்கம் திருப்பப்போகிறீர்கள்? 2014 மக்களவைப் பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறதே?

சமாஜவாதி கட்சியை அவர்கள் தங்களுடைய கட்சியாகவே பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையில் தான் நாங்கள் செயல்படுகிறோம். சிறுபான்மைச் சமூகத்தை மனதில் கொண்டுதான் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். வளர்ச்சியில் அவர்களுக்கு நாங்கள் பங்களித்திருக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளில் எந்தக் கட்சி முஸ்லிம்களுக்கு இந்த அளவுக்குச் செய்திருக்கிறது? வளர்ச்சி அடையாதவர்களுக்காகத்தான் நாம் பாடுபட வேண்டும் என்றும் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டம் கூறுகிறது.

சர்ச்சைக்குரிய ராஜா பைய்யா மீண்டும் உங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜியா-உல்-ஹக் மரணத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்ற பிறகு அவரை மீண்டும் அமைச்சராக்கியிருக்கிறீர்கள். கறைபடிந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்கிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் உங்கள்மீது குற்றம்சாட்டுகின்றன. தாக்கூர்களை தாஜா செய்வதற்காகத்தான் ராஜா பைய்யாவை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்?

ஏன் கூடாது? இது ஜனநாயக நாடு, எல்லா அரசியல் கட்சிகளுமே அதிகத் தொகுதிகளில் வெற்றிபெறுவதைத்தான் விரும்புகின்றன. இது எங்களுக்கு உதவும் என்றால் நாங்களும் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெறுவோம். அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாது என்று நான் உறுதியளிக்கிறேன். எந்த குற்றச்செயலும் நடக்காது. அந்த உறுதிமொழியை என்னால் தர முடியும். நாங்கள் பொறுப்பேற்போம்.

மற்ற கட்சிகள் என்ன செய்கின்றன என்று பாருங்கள். உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று நமக்கென்ன தெரியும்? இது தேர்தல் காலம். யாரோ சிலர் தங்களுடைய பாட்டி செத்துவிட்டார் என்று அழுதுகொண்டிருக்கிறார்கள். தன்னுடைய உயிருக்கு இந்திய முஜாஹிதீன்களால் ஆபத்து என்று சிலர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே அரசியல் நோக்கோடுதான் செயல்படுகின்றனர்.

குஜராத் முதல்வர் மோடி உத்தரப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருக்கிறார். குஜராத்திலிருந்து சிங்கங்களைத் தர வேண்டும் என்று நீங்கள் கேட்டதாக பாரைச் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். மாநிலத்தின் வளர்ச்சியைவிட காடுகளில் வனச்சுற்றுலாவை மேம்படுத்துவதில்தான் உங்களுக்கு அக்கறை என்று சாடியிருக்கிறார்?

(புன்னகை புரிகிறார்). பொதுக் கூட்டங்களில் எங்களுடைய மடிக்கணினிகளைத்தான் அவர் பயன்படுத்துகிறார், அவற்றைப் பயன்படுத்தும்போதாவது அதை அவர் பாராட்ட வேண்டும். எங்களிடமிருந்துதான் அவர்கள் மடிக்கணினிகளை வாங்கினார்கள். உங்களுக்கு வேண்டிய மடிக்கணினிகளை குஜராத்திலேயே வாங்கிக்கொள்வதுதானே என்று மோடியைக் கேட்க விரும்புகிறேன். சத்தீஸ்கர், ராஜஸ்தானில்கூட மடிக்கணினிகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

SCROLL FOR NEXT