தமிழ்நாடு முழுவதும் நலிந்த பிரிவினருக்கு ரூ.7,500 கோடி செலவில் 1 லட்சம் வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுக்கிறது.
சர்வே முடிவு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நலிந்த பிரிவினருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் 400 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கிறது. அந்த வரிசையில் புதிதாக, "ராஜீவ் ஆவாஸ் யோசனா" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் நலிந்த பிரிவினருக்கு ரூ.7,500 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படுகிறது.
இதற்காக சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளில் சர்வே முடிந்துவிட்டது. இவற்றுடன் பெருநகராட்சிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அங்கே சர்வே நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அடுக்குமாடி வீடு
ராஜீவ் ஆவாஷ் யோசனா திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 400 சதுர அடி பரப்பளவில் ரூ.8 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரவுள்ளோம். ரூ.8 லட்சத்தில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் கொடுக்கிறது. மீதமுள்ள 10 சதவீதத்தை அதாவது, ரூ.80 ஆயிரம் மட்டும் பயனாளி செலுத்தினால் போதும். ஒரு அடுக்குமாடி வீடு கிடைக்கும்.
1,777 வீடுகள்
தமிழகம் முழுவதும் கட்டவுள்ள 1 லட்சம் வீடுகளில், முதல்கட்டமாக 1,777 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 1,444 வீடுகளும், திருச்சி கரிகாலன் தெருவில் 333 வீடுகளும் கட்டப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, நீண்டகாலமாக குடிசை போட்டு வசிப்பவர்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக, குடிசை வீடுகள்
இருக்கும் இடத்திலேயே அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றார் அவர்.