மற்றவை

சென்னை: நெரிசலில் திணறும் வேளச்சேரி சாலைகள் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

வி.சாரதா

வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலைய சந்திப்பில் பல முனைகளில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காண, சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்கின்றனர் மக்கள்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்று வேளச்சேரி. தரமணி, துரைப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், கிண்டி ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் வந்து குவியும் இடமாக உள்ளது விஜயநகர் பஸ் நிலைய சந்திப்பு. மாநகர பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களால் இந்த சந்திப்பில் நெரிசல் ஏற்படுகிறது. காலை 8 முதல் 10 மணி வரை உச்சகட்ட நெரிசல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேளச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளுக்கு செல்லும் சாலையின் ஆரம்பப் பகுதி, மிக குறுகலாக இருக்கிறது. ஒரு பஸ் செல்லும்போது, எதிரில் இன்னொரு பஸ் வந்தால் நிலைமை மோசமாகி விடுகிறது.

காந்தி சாலை சந்திப்பு முதல் விஜயநகர் பஸ் நிலையம் வரை சாலை மிகவும் குறுகலாகவே உள்ளது. மேலும், சாலையோரங்களை கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

தினமும் அந்த வழியாக வேலைக்கு சென்று வரும் மாலா என்பவர் கூறுகையில், “காலை நேரத்தில் வேளச்சேரியில் இருந்து தி.நகர் செல்ல ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகிறது” என்றார்.

அப்பகுதியில் பத்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் சுரேஷ் கூறுகையில், “நூறடி சாலை முழுவதும் காலை நேரத்தில் வாகனங்கள் நகராமல் நின்று கொண்டிருக்கும். ஆட்டோவில் சவாரி ஏற்றினால், இந்த சாலையைக் கடந்து யு-டேர்ன் எடுத்து வரவே ஒரு மணி நேரம் ஆகும்” என்றார்.

மேடவாக்கம், தாம்பரம், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி ரயில் நிலைய நிறுத்தம் தொடங்கி விஜயநகர் பஸ் நிலையம் வரை நத்தைபோல ஊர்ந்துதான் வரவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்ஸில் செல்வதைவிட நடந்து சென்றாலே இப்பகுதியை சீக்கிரம் கடந்து விடலாம்.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நிவாசன் கூறுகையில், “வேளச்சேரி ரயில் நிலையம் செல்லும் வழியில் பல தனியார் நிறுவனங்கள், சாலையின் ஒரு பகுதியை ஆக்ரமித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்தினால் நெரிசலை குறைக்கலாம்” என்றார்.

விஜயநகர் பஸ் நிலைய சந்திப்பில் பணியிலிருந்த போக்கு

வரத்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘நூறடி சாலையின் முடிவில் இருக்கும் கடைகளை அகற்றினால் நெரிசல் குறையும்’’ என்று யோசனை தெரிவித்தார்.

வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் சாலை அகலமாக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. இதற்காக பல இடங்களில் சாலை தோண்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் டூவீலரில் செல்லும் சுவலட்சுமி, “இந்தப் பகுதியில் வாகனம் ஓட்டுவது பெரிய சிரமமாக உள்ளது. கல்யாண ஊர்வலம் செல்வதுபோல, ஒருவர் பின் ஒருவராகத்தான் செல்ல வேண்டியுள்ளது. பஸ்களுக்கு பின்னால் சென்றால் பஸ் நிறுத்தத்தில் நாமும் நின்றுதான் செல்ல வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் புழுதியும் அதிகமாக பறக்கிறது” என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்தினால்தான் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

SCROLL FOR NEXT