மற்றவை

திண்டுக்கல்: குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்கும் இசை: அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இசை ஆசிரியை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இசை ரசனை இல்லாத மனிதர்களே உலகில் கிடை யாது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் எல்லோரும் ஓடிக் கொண்டிருப்பதால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உடல் சோர்வடைந்து முடங்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், மனதை அமைதிப்படுத்தவும் இசை ராகங்களைக் கேட்பது, பாடுவது அற்புதமான மாற்று மருந்தாகும் எனக் கூறுகிறார் திண்டுக்கல் ஸ்ருதிலயா மியூசிக் இசைப் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி. இவர் சத்தமில்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இசைக் கல்வியை கற்பித்து, ராகங்களை கேட்பது, பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் ந. வெங்கடாசலம் முன்னிலையில் இசை ஆசிரியை உமா மகேஸ்வரி இசை ராகங்களை பாடிக் காட்டி, அதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

பூமியின் அதிர்வும், மனிதனுடைய இதயத் துடிப்பும் சரிநிகராக இருந்தால் மட்டுமே உடல் சீராக இயங்கும். ஒரு சுவாசத்திற்கு நான்கு முறை இதயம் துடிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 18 முறை இதயம் துடிக்கிறது. இதயத் துடிப்பு சீராக இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகமாகி விடுகிறது. மன அழுத்தத்தைத் தவிர்க்க, நரம்புத் தளர்ச்சி, பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, இதயத் துடிப்பை சீராக வைக்க இசை ராகங்கள் சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் குழந்தைகளின் நினைவாற்றல், பதிவாற்றலை வளர்க்கும்.

அதனால்தான், பள்ளிகளில் தினசரி காலையில் குழந்தைகளை தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்லியுள்ளனர். ஹார்மோன்கள் சீராகச் செயல்பாட்டாலே, உடல் இயக்கம் சீராகும். ஹார்மோன்களை சுரக்க வைக்க, இசை ராகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மருந்தாகும் இசை

ஒரு நொடிப்பொழுதில் ஒருவரது பிரச்சினைகளை மறக்கடித்து மனதை அமைதிப்படுத்த வைக்கும் வலிமை இசை ராகத்துக்கு உண்டு. ஒவ்வொரு இசை ராகத்திலும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. அதனால் குழந்தைகளை தினசரி காலையும், மாலையும் இசை ராகங்களை பாடுவதையும், கேட்பதையும் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், காலையில் இசை ராகங்களைக் கேட்பது, பாடுவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT