சதுப்பு நிலங்களும், மலை முகடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வரை நீலகிரி தனது சிறப்பு அம்சங்களை இழக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காகவும், கால்நடைகளின் தேவைக்காகவும் சதுப்பு நிலங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது.
குறிப்பாக, நீலகிரியிலிருந்த சதுப்பு நிலங்களின் பரப்பை குறைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் ஓர் அம்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு, சதுப்பு நிலங்களையொட்டியுள்ள பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. யூகலிப்டஸ் மரத்தின் வேர் நிலத்தின் அதிகபட்ச ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சிவிடும் என்பதோடு, சதுப்பு நிலப் பகுதிகள் நாளடைவில் சராசரி வாழ்க்கைக்கேற்ற தரத்திற்கு வரும் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்தது.
கடந்த 70களில் ஹெலிகாப்டரில் கற்பூரம் மற்றும் சீகை விதைகள் சதுப்பு நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் தூவப்பட்டடன. தற்போது கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என குரல் எழுந்துள்ள நிலையில், இந்த கற்பூர மரம் உதகைக்கு பெருமை சேர்த்துள்ளது.தென்னிந்தியாவில் அதிக சுற்றளவு கொண்ட கற்பூரம் உதகையில் உள்ளது. உதகை பழைய மைசூர் சாலையில் உள்ள கற்பூர மரம் 12 மீட்டர் சுற்றளவு கொண்டது. மரத்தை சுற்றி 12 பேர் கைக்கோர்த்தால் தான் மரத்தை கட்டியணைக்க முடியும்.