மற்றவை

செட்டிநாட்டு பங்களாவில் வெள்ளிப் பொருட்கள் மாயம்: வளர்ப்பு மகனுக்கு எதிராக எம்.ஏ.எம் அஸ்திரம்

செய்திப்பிரிவு

மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலர் பொறுப்பிலிருந்து அதிரடியாய் நீக்கப்பட்ட எம்.ஏ.எம்.மின் வளர்ப்பு மகன் முத்தையா, நேற்று முன்தினம் நடந்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்நிலையில் முத்தையாவுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எம்.ஏ.எம். தயாராவதாக கூறப்படுகிறது.

தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பதவிகளில் இருந்து முத்தையாவையும், அவரைப் பெற்ற தந்தை சேக்கப்ப செட்டியாரையும் எம்.ஏ.எம்.ராமசாமி கடந்த 29-ம் தேதி நீக்கினார். இந்நிலையில், எம்.ஏ.எம்-மின் பாட்டனார் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் 134-வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அன்று தான் எம்.ஏ.எம்-முக்கும் பிறந்த நாள்.

ஆனால் அந்த விழாவை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் வளர்ப்பு மகன் முத்தையா புறக்கணித்தார். அதேநேரம் எம்.ஏ.எம்-மை விட்டு ஒதுங்கி இருந்த தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் விழாவுக்கு வந்திருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து வளர்ப்பு மகனுக்கு எதிராக அடுத்தடுத்து இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை எம்.ஏ.எம். எடுக்கப் போவதாகவும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் இன்று அல்லது நாளை செட்டிநாட்டு அரண்மனைக்கு வரவிருப்பதாகவும் அரண்மனை வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய அவர்கள், கூறியதாவது: “முத்தையாவை வளர்ப்பு மகனாக தத்து எடுத்ததை ரத்து செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடனும் சமுதாய பெரியவர்களோடும் ஆலோசனை நடத்தி இருக்கிறார் எம்.ஏ.எம். சுவீகாரத்தை ரத்து செய்வது சமுதாயரீதியாக ஏற்றுக் கொள்ளப்படலாம் என்றாலும் சட்டரீதியாக அப்படி செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அதற்காக, முத்தையா செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இனியும் அரண்மனை பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க எம்.ஏ.எம் தயாராய் இல்லை.

வழக்கமாக அவர் மதுரைக்குச் சென்றால், கரூரிலிருந்து அனுப்பி வைக்கப்படும் செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் இந்த முறை வரவில்லை. மதுரையில் எம்.ஏ.எம். வழக்கமாக தங்கும் சொக்கிகுளம் செட்டிநாட்டு பங்களாவில், அரண்மனை பெரியவர்களுக்கு வெள்ளித் தட்டில்தான் உணவு பரிமாறப்படும். ராஜா சர் முத்தையா செட்டியார் காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை.

ஆனால், இந்த முறை எம்.ஏ.எம்-முக்கு இலையில் பரிமாறி இருக்கிறார்கள். பதறிப்போன அவர், ‘எங்கடா வெள்ளித் தட்டு?’ என்று பணியாளர்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு ‘இங்கிருந்த சாமான்களை எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டாங்க’ என்று பதில் வந்திருக்கிறது. சென்னை திரும்பியதும் தனக்கு நெருக்கமானவர்களிடம் இதைச் சொல்லி, ‘எவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருக்கிறார்கள் பாருங்கள்’ என்று வேதனைப்பட்டிருக்கிறார் எம்.ஏ.எம்.

அவர் இப்போதிருக்கும் மனநிலையைப் பார்த்தால், இன்னும் ஒரு வாரத்துக்குள் வளர்ப்பு மகனுக்கு எதிராக இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராவது தெரிகிறது. வளர்ப்பு மகனாக முத்தையாவை தத்து எடுத்ததை ரத்து செய்வதாக அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதை எதிர்த்து முத்தையா சட்ட நடவடிக்கைக்குப் போனால் தன்னிடம் எஞ்சியுள்ள சொத்துகள் எதையும் முத்தையாவுக்குத் தரமுடியாது என தனது வாதத்தை எடுத்து வைக்கவும் எம்.ஏ.எம். தயாராகி விட்டார்’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT