மற்றவை

அரசியலில் ரொட்டி!

சி.ஹரி

“1857-ல் இந்திய நாட்டில் 'கமல் அவுர் ரோடி' என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது; 2014 மக்களவைத் தேர்தலில் 'கமல் அவுர் மோடி' என்ற கோஷம் எதிரொலிக்கிறது. அப்போது நாட்டின் முதலாவது சுதந்திரப் போர் என்று அழைக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நடந்தது. இப்போது செயல்படாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற போராட்டம் நடக்கிறது” என்றார் நரேந்திர மோடி. உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் நகரில் பாஜக கூட்டணி வேட் பாளர்களுக்கு ஆதரவாக சனிக்கிழமை பேசியபோது இதை அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வட இந்திய நகரங்களில் 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின்போது சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு ஆதரவான படைகளைத் திரட்ட சப்பாத்திதான் கிராமங்களுக்கெல்லாம் ‘தூது' சென்றது. வாய்மொழியாகவோ ஓலையாகவோ தகவலைத் தெரிவித்தால் பிரிட்டிஷார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்காக, வட இந்தியாவிலும் வங்காளத்திலும் உள்ள கிராமங்களுக்கு ‘ரொட்டி' என்றழைக்கப்படும் சப்பாத்தியைத்தான் அனுப்பிவைத்தார்கள். 'புரட்சிக்காக அணி திரள வேண்டும்' என்ற வாசகமும் எங்கே, எப்படி வர வேண்டும் என்ற தகவல்களும் சப்பாத்திகளில் இருந்தன. இதைப் பெற்ற கிராமத் தலைக்கட்டுகள் போருக்குத் தேவைப்படும் சிப்பாய்கள், குதிரைகள், படைக்கலன்கள் ஆகியவற்றைத் திரட்டி அனுப்பிவைத்தனர். மராட்டிய மன்னர் பேஷ்வா இரண்டாவது பாஜிராவ் சிறையில் அடைக்கப்பட்டதால் வெகுண்ட அவரது தளகர்த்தர்கள், தாந்தியா தோபே, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றோரின் ஆதரவு இந்தப் புரட்சிக்கு இருந்தது.

ரொட்டியைத்தான் வட இந்தியர்கள் ரோடி என்று அழைக்கின்றனர். ரோடி மீண்டும் சுதந்திர இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றது. 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலையைப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகளுக்குத் தணிக்கை வந்தது. அரசுக்கு எதிராக யாரும் எதுவும் பேசவும் எழுதவும் முடியாமல் இருந்தனர். பிறகு நெருக்கடிநிலை அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு கைதான எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிரிந்திருப்பதால்தான் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியவில்லை, எனவே ஒரே கட்சியாக இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய லோக்தளம், சமாஜவாதி, ஜனசங்கம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் பொதுக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவளிப்பதற்காகவும், கூட்டம் நடைபெறுகிறது என்பதைத் தொண்டர் களுக்குத் தெரிவிப்பதற் காகவும் மீண்டும் ரொட்டிப் பரிமாற்றம் நடைபெற்றது.

இதைத்தான் மோடி தன்னுடைய பேச்சில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

SCROLL FOR NEXT