ஜனவரி 11-17 வரை சாலைப் பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பொங்கல் பண்டிகை விடுமுறை தினங்கள் வருவதால் தமிழக போக்குவரத்துத் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வாகன விபத்துகளைக் குறைக்கவும், சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சக வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களிலும் இந்த 7 நாள்களிலும் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி, மாணவர்கள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள், ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 24 ஆண்டுகளாக ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு வந்த சாலைப் பாதுகாப்பு வாரம், தற்போது 2014-ம் ஆண்டுக்கு ஜனவரி 11-17 வரையிலான வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விடுமுறை இந்த காலகட்டத்துக்குள் வருவதால், மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழகப் போக்குவரத்துத் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:
சாலைப் பாதுகாப்பு வார விழாவுக்கான தேதியை ஜனவரி 11-17 என மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது மற்ற மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்குப் பொருத்தமுடையதாக இல்லை. காரணம் சாலைப் பாதுகாப்பு வாரம் தொடங்கும் 11-ம் தேதி சனிக்கிழமை, 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஜன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் என 5 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளது. மீதமுள்ள 13, 17-ம் தேதிகள் மட்டுமே அலுவலக பணி நாள்கள்.
சம்பிரதாய நிகழ்ச்சிக்காக...
அதிலும் 13-ம் தேதி போகிப் பண்டிகை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் பலர் விடுமுறை எடுத்துக் கொள்வர். பேரணியில் பங்கேற்க மாணவர்களோ, ஓட்டுநர்களோ வரமாட்டார்கள். சிறப்பு முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினால் அதில் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு ஊழியர்களுக்கும் ஆர்வம் இருக்காது. எனவே இந்த முறை சம்பிரதாய நிகழ்ச்சியாக மட்டுமே சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சாலைப் பாதுகாப்பு வாரத்துக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு பயன்படாமல் வீணாகப் போகிறது. இனிவரும் ஆண்டுகளிலாவது பொங்கல் பண்டிகை அல்லாத வாரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.
12ம் தேதி ‘வாக்கத்தான்’
2014-ம் ஆண்டின் சாலைப் பாதுகாப்பு வார 2-வது நாளான ஜன. 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘வாக்கத்தான்’ (நீண்டதூர நடைபயணம்) நடத்த வேண்டும் என மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் பங்கேற்க மாட்டார்கள். எனவே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் நபர்களை வாக்கத்தானில் களமிறக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கடைசி நாளான ஜன. 17-ம் தேதி ஒரே நாளில் பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம், மருத்துவ முகாம், பரிசளிப்பு நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துவது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர்.