சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவிற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கணினி மயமாக்கல் நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையால், கடந்த சில நாட்களாக மாநகராட்சி மைய கணிணியுடன் இணைப்பில் பிரச்னை ஏற்பட்டதின் காரணமாக மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களில் வரி வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண்பதன் மூலம், பணம் கட்டச் சென்று வெகு நேரம் காத்திருக்கும் பொதுமக்களின் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொங்கும் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அம்மாபேட்டை ஆகிய நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 60 வார்டுகளில் 8.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கடை, வீடு, நிறுவனங்கள், ஆலைகள் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது.
மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் மூலம் 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு, கடை, நிறுவனங்களிடம் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மண்டல அலுவலகம் மூலம் தினசரி 10 லட்சம் ரூபாய் வரை வரி வசூல் செய்யப்படுகிறது. மைய அலுவலகத்தின் மூலம் நான்கு மாநகராட்சி மண்டல அலுவலக வரி வசூல் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று, ரசீது கொடுத்து பணம் பெறும் மாற்றம் செய்து, அனைத்து வசூலும் கணினி மூலம் பதிவேற்றம் செய்து, ரசீது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு
பொதுமக்கள் அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வரிகளை செலுத்தி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கும் ஒரு மொபைல் வண்டி மூலம் வரி வசூல் பணி நடந்து வருகிறது. வீதிகளுக்கு நேரடியாகச் சென்று, மக்களிடம் வரி வசூலில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்னை காரணமாக கணினி மூலம் வரி வசூல் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கூடுதலாக வரி வசூல் நடக்கும். தினமும் ஏராளமான பொதுமக்கள் மண்டல அலுவலகங்களுக்கு சென்று வரி செலுத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக வரி செலுத்த வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. சர்வர் பிரச்னையால் கணினியில் வரி வசூலை பதிவு செய்ய முடியவில்லை என்று அலுவலர்கள் வரி செலுத்த வரும் மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் விரக்தி
அதேபோன்று, வீதிகளில் சென்று வரி வசூல் செய்யும் மொபைல் வாகனங்களும், வரி வசூல் செய்யாமல், சாலையோரங்களில் நிறுத்தி வைத்து, பணம் கட்ட வருபவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். சில மணி நேரம் கழித்து மீண்டும் சர்வர் தயாராகும் நிலையில், காத்திருந்து பணம் கட்ட வேண்டிய நிலைக்கும் மக்கள் உள்ளாகியுள்ளனர். சர்வரில்
ஏற்பட்ட கோளாறை பொறியாளர்கள் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மைய அலுவலகம் மாற்றப்பட்டதால், சர்வர் இணைப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் சர்வர் இயங்கியும், பல நேரங்களில் இயங்காமலும் உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வரி வசூல் பணி பெரிதும் குறைந்துள்ளது. தினமும் 10 லட்சம் வரி வசூல் செய்யும் மண்டல அலுவலகங்கள் கூட 4 லட்சம் ரூபாய் அளவிலே வரி வசூலிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.
ஜன., முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் வரி வசூல் பிரகாசமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், வரி வசூல் மந்த நிலை காணப்படும். எனவே, அலுவலர்கள் விரைந்து வரி வசூல் செய்யும் சூழ்நிலையில், சர்வர் அடிக்கடி பிரச்னை செய்வதால், வசூல் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சர்வர் பிரச்னைக்கு தீர்வு காணும் நிலையில், வெகு நேரம் பணம் காட்ட காத்திருக்கும் தொல்லையில் இருந்து மக்கள் விடுபடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி மண்டல துணை ஆணையர் ப்ரீத்தி கூறியதாவது:
சேலம் மாநகராட்சி அலுவலகம் தொங்கும் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட போது, சர்வர் இணைப்பில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வரி வசூல் செய்யமுடியவில்லை. சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று சர்வர் இணைப்பை ஓரளவு சீர் செய்துள்ளோம். இனிமேல் வரிவசூல் பணி பாதிக்காது. இவ்வாறு ப்ரீத்தி கூறினார்.