மற்றவை

நெல்லை: பெங்களூர் தினசரி ரயில், ஏமாற்றினார் அமைச்சர்; இயங்கிய வாராந்திர ரயிலும் நிறுத்தம்

அ.அருள்தாசன்

பெங்களூர் - நாகர்கோவில் தினசரி ரயில் சேவையைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் தேதிக்காக, இந்த ரயில் சேவையைத் தொடங்குவது இழுத்தடிக்கப்படுவதாக பயணிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஓசூருக்கு, மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 15 வருடங்களாக நாகர்கோவிலில் இருந்து, பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கை.

பல ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்கு பின், தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று, 2013–ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், நாகர்கோவில் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ரயில் கால அட்டவணையில், இந்த தினசரி ரயில் இயங்கும் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த மற்ற ரயில்களில், ஒரு சில ரயில்களைத் தவிர அனைத்தும் இயக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்தமிழக பயணிகளுக்கு அதிக உபயோகமான பெங்களூர் தினசரி ரயில் 11 மாதங்கள் ஆகியும் இயக்கப்படாமல் உள்ளது. போதாத குறைக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்த வாராந்திர ரயிலின் சேவையையும் ரயில்வே நிர்வாகம் கடந்த வாரத்துடன் நிறுத்தியது.

பெங்களூர் கோட்ட அதிகாரிகளை, தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தொடர்பு கொண்டு கேட்ட போது, பிப்ரவரி 2-ம் தேதி பெங்களூரில் தொடக்க விழா நடப்பதாகவும், அன்று முதல் தினசரி ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், ரயில்வே அமைச்சரின் தேசி கிடைக்காத காரணத்தால் கடைசி நேரத்தில் விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

பயணிகள் சங்க நிர்வாகி பி.எட்வர்ட்ஜெனி கூறியதாவது:

பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ரயில்வே அமைச்சர் கவனம் செலுத்தி வருவதால், ரயில் இயக்கம் இன்னும் காலதாமதம் ஆகும் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் பிப்ரவரி 5ம் தேதி துவங்கி 17-ம் தேதி முடிகிறது. இடைக்கால ரயில்வே பட்ஜெட் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

எனவே, இந்த ரயில் இயக்கப்பட்டால் 5-ம் தேதிக்கு முன் இயக்கப்படும் அல்லது அடுத்த சனி அல்லது ஞாயிறு நாடாளுமன்றம் விடுமுறையாக இருப்பதால் 8ம் தேதி அல்லது 9-ம் தேதி இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

நீதிமன்றத்தை அணுக முடிவு

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயில், இந்த நிதி ஆண்டுக்குள், அதாவது, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இயக்கப்படாத பட்சத்தில், கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார் எட்வர்ட் ஜெனி.

SCROLL FOR NEXT