திருப்பூர் கே.எஸ்.சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மரம் நடுவதற்காகக் குழிகள் தோண்டியபோது, மூன்று முதுமக்கள் தாழிகள் அண்மையில் கிடைத்தன.
கோவை பி.எஸ்.ஜி கல்லூரிப் பேராசிரியரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பேராசிரியர் முனைவர் ச. இரவி, தமது மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது கிடைத்த இந்த முதுமக்கள் தாழிகள் மூலம் இப்பகுதி தாழிக்காடுகள் உள்ள பகுதி எனத் தெரியவந்துள்ளது. முன்னர், பாண்டியன் குழிக்காடு என அழைக்கப்பட்டு வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தாழிகள் கூம்பு வடிவத்தில், கைவேலைப்பாட்டுடன் காணப்பட்டன.
எச்சங்கள்
புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால மக்கள், இறந்த மனிதனோடு அவன் பயன்படுத்திய பொருட்களைச் சேர்த்துப் புதைப்பது வழக்கம். முதலாவது முதுமக்கள் தாழியில் கறுப்பு நிறம் பூசப்பட்ட 1½ செ.மீ. விளிம்புடைய உணவுத் தட்டு ஒன்று உடைந்த நிலையில் தலை எலும்புகளுடன் காணப்பட்டன. இரண்டாவது தாழியில் எலும்புகளின் சில பகுதிகள் மட்டும் கிடைத்துள்ளன. இருகூரில் கிடைத்த பேழையில் மல்லாந்து காலை மடக்கிய நிலையில் முழு மனிதனின் எலும்பு இருந்ததாக மக்கள் கூறினர். பொதுவாக முதுமக்கள் தாழிகளில் முழு மனித எலும்புகள் கிடைப்பது அபூர்வமாகும்.
சடங்குகள்
கொங்கு நாட்டில் சங்க காலத்திலும், சங்க காலத்திற்குச் சற்று முந்தைய காலத்திலும் இறந்தவர்களுக்குச் சடங்குகள் செய்யும் வழக்கம் இருந்திருப்பதை இம் முதுமக்கள் தாழி வழி அறிந்து கொள்ள முடிகிறது. மனிதன் இறந்தவுடன் உறவு அற்றுப்போவதில்லை என்ற நம்பிக்கையின் அடித்தளத்தில் அக்கால மக்கள் இருந்ததை இதுபோன்ற ஈமச் சின்னங்கள் வழி அறிய முடிகிறது.
இந்த முதுமக்கள் தாழிகள் திருப்பூரின் மையத்தில் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நொய்யல் ஆற்று பண்பாட்டு மனிதர்கள் திருப்பூர் மையப் பகுதியில் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் இவை என்கிறார் பேராசிரியர் ச. இரவி.