செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிற செயற்கைக்கோளை வடிவமைப்பதிலேயே பெண்கள் பங்குபெறும்போது அவர்களால் மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராட முடியாதா? பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் பலவகையான விழிப்புணர்வு பிரசாரங்கள், மாரத்தான், விலை குறைந்த பரிசோதனை முறைகள், விளம்பரங்கள் இவை அனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான். ‘ஆரம்பநிலையில் கண்டறிந்தால் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்’ என்பதுதான் அது.
எத்தனை பேர் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் நோயைக் கண்டறிய செய்யப்படுகிற மாமோகிராம் குறித்தும் அறிந்திருக்கிறார்கள்? அவற்றைப் பார்த்தாலும், அது நமக்கானதல்ல என்று கடந்து சென்றுவிடுகிறோம்.
ஒவ்வொரு நாளும் நம் அண்டை வீட்டினரிடம் இருந்தும், உறவுகளிடம் இருந்தும், நம் சக பயணியிடம் இருந்தும் புற்றுநோய் குறித்த பல அச்சுறுத்தும் கதைகளைக் கேட்கிறோம். நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க சரியான தருணம் இது.
உலக அளவில் அமெரிக்கா, சீனாவை அடுத்து மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் பெருநகரங்களிம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் மார்பகப் புற்றுநோய் அதிகமாகப் பரவிவருகிறது. இளம் வயதிலேயே புற்றுநோயின் தாக்கம், அதிதீவிர மரபுவழி தாக்கம், காலம் கடந்த நோய் கண்டறிதல் ஆகியவை புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய் தாக்கியவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு நோய் கண்டறிதல் மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் எப்படி நோயைக் கண்டறிவது என்றும் அதை யாரெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிந்துகொள்வது அவசியம்.
25 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் மார்பக ஆரோக்கியம் குறித்த தெளிவு வேண்டும். இதை மார்பக விழிப்புணர்வு என்று சொல்வார்கள். பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிகிற காலத்தில் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் தென்படுகிற சிறிய மாற்றங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மார்பகத்தில் ஏற்படுகிற மாற்றங்களைக் கண்டறிய மார்பக சுய பரிசோதனையே சிறந்த, எளிய வழி.
கையின் மூன்று நடுவிரல்களையும், உள்ளங்கையையும் பயன்படுத்தி மார்பகத்தையும், அக்குள் பகுதியையும் வெவ்வேறு கோணங்களில் அழுத்திப் பார்க்க வேண்டும். இந்தப் பரிசோதனையைக் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டும், குளிக்கும்போதும், படுத்த நிலையிலும் மாதத்துக்கு ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.
நாற்பது வயது அல்லது அதைக் கடந்த பெண்கள் ஒவ்வொரு வருடமும் மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதனுடன் மாமோகிராம் பரிசோதனையும் செய்ய வேண்டும். தொடர்ச்சியான சுய பரிசோதனையும் அவசியம். மார்புக் காம்பில் இருந்து ரத்தம் வடிதல், மார்பகம் சிவந்துபோவது, மார்பகம் மற்றும் காம்புப் பகுதியில் தோல் உரிதல், மார்பகத்திலும் அக்குள் பகுதியிலும் கட்டிகள் தோன்றுவது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்துவிட்டால் அதைக் குணப்படுத்தும் வழிமுறைகள் எளிமையாக இருக்கும். ஒரு மருத்துவரால் கண்டறியப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே மாமோகிராம் மூலம் மார்பகக் கட்டிகளைக் கண்டறியலாம். மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. அதனால் மார்பகப் புற்றுநோய்க்கான இந்த விழிப்புணர்வு மாதத்தைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோயைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை பெறலாம். மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களையும், தொடர்ந்து செய்யக்கூடிய பரிசோதனை முறைகளையும் மருத்துவரிடம் கேட்டறியலாம்.
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அதிகபட்ச சாத்தியம் இருக்கும்பட்சத்தில் வாழ்க்கை முறை மாற்றம், வேதியியல் மற்றும் மரபணு பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படும். பிரபல ஹாலிவுட் நடிகை செய்துகொண்டது போல மார்பகத்தை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.
பிங்க் அக்டோபரை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதலை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அக்டோபர் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இலவச மாமோகிராம் பரிசோதனை முகாம் நடத்துகிறது.
டாக்டர் வி. சீனிவாசன்