மற்றவை

மதுரை: இன்னமும் பிடிபடாத ஜல்லிக்கட்டு காளைகள்; கயிறும் கையுமாக அலையும் உரிமையாளர்கள்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்காக அவிழ்க்கப்பட்ட காளைகளில் சுமார் 50 காளைகள் இன்னமும் பிடிபடாமல் அழகர்கோவில் காட்டுப் பகுதியில் வலம் வருகின்றன. அவற்றைப் பிடிக்க கயிறும் கையுமாக அலைகின்றனர் உரிமையாளர்கள்.

மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் கடந்த 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோயில் மாடுகள் உள்பட 548 காளைகள் களமிறங்கின. இதேபோல, ஜன. 16-ம் தேதி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 640 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் அடக்கப்பட்ட, அடங்காத காளைகள் அனைத்தும் அடுத்த காளை வெளியே வரும் முன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.

இவ்வாறு ஓடிய காளைகளை அதன் உரிமையாளர்கள் பின்னாலேயே ஓடிச் சென்று பிடித்தனர். சில காளைகள் யாரிடமும் சிக்காமல் புலிப்பாய்ச்சலில் சென்றன.

அவற்றில் பல சாத்தையாறு அணைப் பகுதி, மஞ்சமலை பகுதி, சரந்தாங்கி மலை, செம்பூத்துக்கரடு போன்றவற்றுக்குள் புகுந்தன. ஆசை ஆசையாய் வளர்த்த காளைகளைத் தேடி, அதன் உரிமையாளர்கள் கடந்த 4 நாள்களாக அலங்காநல்லூர் பகுதியில் வலம் வருகின்றனர். கையில் கயிறு, நீண்ட கம்புடன் மோட்டார் சைக்கிள், காரில் சுற்றும் அவர்கள் சாப்பாட்டைக்கூட மறந்து மாடுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், இவ்வாறு திரியும் மாடுகளால் பொதுமக்கள் காயமடைவதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு கலெக்ஷன் சென்டர் என்ற பெயரில் சுமார் 2 ஏக்கர் சுற்றளவில் மரத்தடுப்பு அமைத்து காளைகள் சேகரிப்பு மையம் அமைத்திருந்தனர். ஆனால், கோபத்தோடும், பயத்தோடும் ஓடிவந்த முரட்டுக்காளைகள் தடுப்பு வேலிகளையும் உடைத்துக் கொண்டு ஓடிவிட்டன.

இதுகுறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் கூறியது:

பெரும்பாலும் ஜல்லிக்கட்டு காளைகளை கட்டிப்போட்டே வளர்க்கிறோம். ஜல்லிக்கட்டின்போது மட்டும்தான் அவற்றை அவிழ்த்துவிடுகிறோம். அதுவும் மூக்குக்கயிற்றைக்கூட அவிழ்த்துவிடுவதால், செம குஷியாகிவிடுகின்றன. இவை தொடர்ந்து இரண்டு, மூன்று நாள்களுக்குக்கூட சிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த ஆண்டு ஓடிய மாடுகள் மட்டுமின்றி, முந்தைய ஆண்டுகளில் ஓடிய மாடுகளும்கூட மலைப்பகுதியில் பராரியாகத் திரிகின்றன. அவற்றைப் பிடிக்கவே முடியாது. கிட்டத்திட்ட காட்டுவாசிகளாகிவிட்டன” என்றார்.

வாவிடமருதூர் குமார் கூறுகையில், “இந்த ஜல்லிக்கட்டுக்காக 45 ஆயிரம் ரூபாய்க்கு மாடு வாங்கினேன். பாலமேடு ஜல்லிக்கட்டன்று ஓடிய மாட்டை இதுவரையில் பிடிக்க முடியவில்லை. பத்திரிகை விளம்பரம் தான் கொடுக்க வேண்டும் போல” என்றார்.

வந்துவிட்டது தீர்வு!

காளைகள் தொலைந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு உடலில் அடையாளம் இடுவது, பெயிண்டால் செல்போன் நம்பரை எழுதி வைப்பது, போஸ்டர், பத்திரிகை விளம்பரம் செய்வது போன்ற முறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், இதில் முழுமையான பலன் கிடைப்பதில்லை. தற்போது இந்தப் பிரச்னைக்கும் தீர்வு வந்துவிட்டது.

இந்த ஆண்டு அலங்காநல்லூருக்கு ஏ.சி. வாகனத்தில் காளைகளை அழைத்து வந்தவர்கள், காளைகளின் உடலில் ஜி.பி.எஸ். (இருப்பிடத்தைக் கண்டறியும்) கருவியைப் பொருத்திவிட்டனர். ஒருவேளை அந்த மாடுகள் எல்லாம் தொலைந்திருந்தால்கூட, செல்போன் உதவியுடன் அவற்றை அதன் உரிமையாளர்கள் மீட்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT